காங்கிரஸ் தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப்போவது யார்?- இன்று வாக்குப்பதிவு


காங்கிரஸ் தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப்போவது யார்?- இன்று வாக்குப்பதிவு
x

கோப்புப்படம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

புதுடெல்லி,

நாட்டின் பழமையான கட்சி என்ற பெருமைக்குரிய காங்கிரஸ் கட்சிக்கு வயது 137. இந்த நெடிய பயணத்தில், அந்த கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்பட்டிருப்பது இது 6-வது முறை ஆகும்.

இந்த தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை. 24 ஆண்டுகளுக்கு பிறகு அந்த குடும்பத்தைச் சேராத ஒருவர் இன்றைய தேர்தல் மூலம் தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப்போகிறார்.

இன்றைய தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் என இருவர் களத்தில் நின்றாலும், யார் வெற்றி பெற்றாலும் அவர் தென் மாநிலத்தவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். மல்லிகார்ஜுன கார்கே, நமது அண்டை மாநிலமான கர்நாடகத்தை சேர்ந்த மூத்த தலைவர். அதே போன்று சசி தரூர் மற்றொரு அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர் ஆவார்.

137 ஆண்டு கால காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிற மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வயது 80. சசி தரூருக்கு வயது 66.

9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநில காங்கிரஸ் பிரதிநிதிகள் ஓட்டு போட்டு, இவர்களில் ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்போகிறார்கள்.

இதற்கான வாக்குப்பதிவு டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் சென்னை சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் தலைமையகங்களிலும் இன்று நடக்கிறது.

மல்லிகார்ஜுன கார்கேயும் சரி, சசி தரூரும் சரி இருவருமே, இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பம் நடுநிலை வகிக்கிறது, இந்த தேர்தலில் அதிகாரபூர்வ வேட்பாளர் கிடையாது என்கிறார்கள்.

ஆனாலும் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் 'அதிகாரபூர்வமற்ற' அதிகாரபூர்வ வேட்பாளராகவே பார்க்கப்படுகிறார். கட்சியின் மூத்த தலைவர்கள் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர். சசி தரூர், ஐ.நா. சபையின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விட்டு காங்கிரசில் சேர்ந்து அரசியல் களத்தில் குதித்தவர். அதனால்தானோ என்னவோ அவர் தன்னை மாற்றத்துக்கான வேட்பாளர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

முக்கியத்துவம் என்ன?

இந்த தேர்தலின் முக்கியத்துவம் என்று எதைச்சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த விரிவான பதில் இது-

"காங்கிரஸ் கட்சி தனது 137 ஆண்டு கால வரலாற்றில், தலைவர் பதவிக்கு 6-வது முறையாக உள்கட்சி தேர்தலை சந்திக்கிறது. ஊடகங்கள் 1939, 1950, 1997, 2000 ஆகிய 4 தேர்தல்களை முக்கியமாக காட்டுகின்றன. ஆனால், 1977-ம் ஆண்டும் தேர்தல் நடந்தது. அதில் பிரமானந்த ரெட்டி தலைவர் ஆனார். பொதுவாகவே எப்போதுமே இத்தகைய பதவிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் 'ஒருமித்த கருத்து மாடல்' என்பதில் நான் நம்பிக்கை வைத்து வந்துள்ளேன். நேருவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்த அணுகுமுறையில் மிகவும் பிரபலமாக திகழ்ந்தவர் காமராஜர்தான் என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் வரலாறு

* 1939-ம் ஆண்டு, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்பட்டது. இதில் என்ன சோகம் என்றால் மகாத்மா காந்தி நிறுத்திய சீதாராமய்யா, நேதாஜி சுபாஷ் சந்திர போசிடம் தோல்வியைத் தழுவினார்.

* சுதந்திரத்துக்கு பின்னர் 1950-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சர்தார் வல்லபாய் படேலின் ஆதரவாளரான புருசோத்தம் தாஸ் தாண்டனும், ஜவகர்லால் நேருவின் தேர்வான ஆச்சாரிய கிருபளானியும் களம் கண்டனர். அதில் தாண்டன் அபார வெற்றி பெற்றார்.

* 1977-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் பரூவா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சித்தார்த்த சங்கர் ரேயையும், கரன் சிங்கையும் ஆந்திர மாநிலத்தின் பிரமானந்த ரெட்டி வீழ்த்தி வெற்றி கண்டார்.

* 1997-ம் அண்டு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மும்முனை போட்டியில் சரத்பவாரையும், ராஜேஷ் பைலட்டையும் வீழ்த்தி சீதாராம் கேசரி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் மராட்டியம் மற்றும் உத்தரபிரதேசம் தவிர்த்து எல்லா மாநிலங்களும் சீதாராம் கேசரியை ஒருசேர ஆதரித்தன. அவர் 6,224 வாக்குகள் பெற்றார். சரத்பவாருக்கு 882 ஓட்டுகளும், ராஜேஷ் பைலட்டுக்கு 354 வாக்குகளும் கிடைத்தன.

* 2000-ம் ஆணடு நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தின் சோனியா காந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாதா களம் இறங்கினார். இந்த தேர்தலில் அவர் படுதோல்வி அடைந்தார். அவருக்கு கிடைத்த ஓட்டுகள் 94 மட்டுமே. சோனியாவுக்கு 7,400-க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன.

* 2022 தேர்தல் முடிவுக்கு 2 நாட்கள் காத்திருக்க வேண்டும். இருப்பினும் இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் சோனியா காந்தியிடம் இருந்து கட்சி தலைமையைக் கைப்பற்றுவதும் முக்கியத்துவம் பெறுகிறது.

**************************


Next Story