மந்திரி செலுவராயசாமி விஷயத்தில் என்னை இழுப்பது ஏன்?; குமாரசாமி கேள்வி


மந்திரி செலுவராயசாமி விஷயத்தில் என்னை இழுப்பது ஏன்?; குமாரசாமி கேள்வி
x
தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 14 Aug 2023 6:45 PM GMT)

மந்திரி செலுவராயசாமி விஷயத்தில் என்னை இழுப்பது ஏன்? என்று குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி கடந்த வாரம் கம்போடியா நாட்டுக்கு சுற்றுலா சென்றார். அந்த சுற்றுலாவை முடித்துக் கொண்டு அவர் நேற்று நாடு திரும்பினார். அவர் பெங்களூரு விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குமாரசாமி வெளிநாட்டிலேயே இருக்கட்டும், அதற்கு வேண்டிய வசதிகளை நாங்கள் செய்து கொடுக்கிறோம் என்று விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி கூறியுள்ளார். இதை பார்க்கும்போது, எங்களை கொள்ளையடிக்க விட்டு விடுங்கள், நீங்கள் வெளிநாட்டில் இருந்து விடுங்கள் என்று சொல்வது போல் உள்ளது. இங்கு அவர் கொள்ளையடித்து கொண்டு இருக்கிறார். நான் இங்கு இருந்தால் அவரை தொந்தரவு செய்கிறேன் அல்லவா?.

நான் வெளிநாட்டு பயணத்திற்கு அவரது ஏற்பாடு மூலம் செல்ல வேண்டுமா?. அந்த பாவத்தின் பணத்தை எடுத்து செல்ல வேண்டுமா?. வெளிநாட்டிற்கு செல்லும் தகுதி எனக்கு இல்லையா?. கடந்த 12 ஆண்டுகளாக கட்சி பணிகளுக்கு நேரத்தை செலவழித்தேன். வெளியூர் செல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எந்தெந்த நாட்டில் என்னென்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?.

நண்பா்கள் அழைப்பு விடுத்ததால் நான் கம்போடியா நாட்டுக்கு சென்றேன். அங்கு அங்கோர்வாட் பகுதியில் கட்டியுள்ள அற்புதமான கோவிலை பார்த்தேன். பிரம்மன், விஷ்ணு, மகேஷ்வரன் ஆகிய மூன்று பேர் உள்ள கோவில் ஆகும். அதை பார்த்து நான் ஆச்சரியம் அடைந்தேன். அண்மை காலமாக அந்த நாடு பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருகிறது.

ஒரு காலத்தில் அந்த நாடு மிக மோசமாக இருந்தது. கம்போடியா நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக உள்ளதாக அங்குள்ள மந்திரி ஒருவர் கூறினார். அங்கு மக்களின் வரிப்பணத்தை செலவிடுவதில் கடுமையான விதிமுறைகள் உள்ளன. நம்மிடம் பணத்துக்கு தட்டுப்பாடு இல்லை. ஆனால் அதை தற்போது உள்ள ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.

தற்போது மத்திய பிரதேசத்திலும் காங்கிரசார் பா.ஜனதா அரசுக்கு எதிராக 40 சதவீத கமிஷன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். நமது நாட்டை காங்கிரசார் எங்கே கொண்டு செல்கிறார்கள்?. தனக்கு எதிரான கடிதம் போலி என்றால் மந்திரி செலுவராயசாமி கவர்னரை சந்தித்தது ஏன்?. இதுகுறித்து நான் எங்கும் பேசவில்லை. எனது பெயரை இந்த விஷயத்தில் இழுப்பது ஏன்?.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story