தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்தது ஏன்? பரபரப்பு தகவல்


தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்தது ஏன்? பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 10 March 2024 6:06 AM GMT (Updated: 10 March 2024 6:09 AM GMT)

மூன்று தேர்தல் ஆணையர்கள் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே இப்போது பொறுப்பில் உள்ளார்.

புதுடெல்லி:

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அருண் கோயலின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

மற்றொரு தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டேவின் பதவிகாலம் கடந்த மாதம் 14ம் தேதி நிறைவடைந்தது. எனவே, 3 ஆணையர்கள் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே இப்போது பொறுப்பில் உள்ளார்.

அருண் கோயல் சொந்த காரணங்களுக்காக பதவி விலகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சொந்த காரணம் என்றால், உடல்நலக்குறைவு அல்லது குடும்ப பிரச்சினைக்காக அவர் தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்திருக்கலாம் என்று பேசப்பட்டது. ஆனால், இதுபற்றி விசாரித்தபோது அப்படி எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அருண் கோயல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அவரது ராஜினாமா பேசுபொருளாகி உள்ளது.

இந்நிலையில் அருண் கோயலுக்கும், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதுதான் ராஜினாமாவுக்கு காரணம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது சில கோப்புகள் தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story