ராகுல் காந்திக்கு மட்டும் மத்திய அரசு கடிதம் எழுதுவது ஏன்? - காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா கேள்வி
ராகுல் காந்திக்கு மட்டும் மத்திய அரசு கடிதம் எழுதுவது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்திய ஒற்றுமை யாத்திரையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற இயலாவிட்டால் பொது சுகாதாரம் கருதி இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- "ராகுல் காந்திக்கு மட்டும் மத்திய அரசு இவ்வாறு கடிதம் எழுதுவது ஏன்? ராஜஸ்தானில் பாஜக தலைவர் சதிஷ் புனியா மேற்கொண்டு வரும், மக்கள் ஆக்ரோஷ யாத்திரையை நிறுத்தச் சொல்லி கடிதம் அனுப்பப்பட்டதா? நாட்டில் எங்குமே கரோனா விதிகள் அமலில் இல்லை. முதலில் விதிகளை அறிவியுங்கள். பிறகு நாங்கள் அவற்றை பின்பற்றுகிறோம்."
இவ்வாறு அவர் கூறினார்.