விஷம் கலந்த உணவு கொடுத்து மனைவி, 2 குழந்தைகள் கொலை; புற்றுநோயாளி தற்கொலை முயற்சி
பெங்களூருவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு புற்றுநோயாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
புற்று நோயால் பாதிப்பு
பெங்களூரு கோனனகுன்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வட்டரபாளையா பகுதியை ேசர்ந்தவர் நாகேந்திரா. இவரது மனைவி விஜயா(வயது 28). இந்த தம்பதிக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்திருந்தது. தம்பதிக்கு 7 வயதில் நிஷா மற்றும் 5 வயதில் தீக்ஷா என்ற 2 மகள்கள் இருந்தார்கள். நாகேந்திரா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது.
விஜயா மருந்துக்கடை ஒன்றில் கடந்த 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலையில் வீட்டில் விஜயா, அவரது குழந்தைகள் நிஷா, தீக்ஷா ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தார்கள். மேலும் நாகேந்திராவும் தனது கையை அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
3 பேர் கொலை
இதுபற்றி உடனடியாக கோனனகுன்டே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நாகேந்திராவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் விஜயா, அவரது பிள்ளைகளின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது தன்னுடைய மனைவி விஜயா, பிள்ளைகள் நிஷா, தீக்ஷா ஆகியோருக்கு உணவில் விஷத்தை கலந்து கொடுத்து நாகேந்திரா கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் அவர் தன்னுடைய கையை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நாகேந்திரா தனது மனைவி, குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமை
அதே நேரத்தில் விஜயா மருந்துக்கடைக்கு வேலைக்கு சென்றதாகவும், நாகேந்திரா வேலைக்கு எங்கும் செல்லாமல் மதுஅருந்தி வந்ததாகவும், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும் விஜயாவின் பெற்றோர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். தற்கொலைக்கு முயன்ற நாகேந்திராவும் விஷம் குடித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அவரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து கோனனகுன்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோனனகுன்டே பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.