கோடரியால் வெட்டி மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
கோடரியால் வெட்டி மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கலபுரகி: கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தாலுகா வாடி டவுன் பகுதியில் வசித்து வந்தவர் மகாதேவ்சிங். தொழிலாளி. இவரது மனைவி சாருபாய். இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. திருமணமான நாள் முதல் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறின்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மகாதேவ்சிங் வீட்டில் இருந்த கோடரியை எடுத்து மனைவி என்றும் பாராமல், சாருபாயை தாக்கினார். அதில் சாருபாய் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மகளை கொலை செய்த மகாதேவ்சிங் மீது, பெண்ணின் பெற்றோர் வாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் மகாதேவ்சிங்கை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கலபுரகி மாவட்ட 4-வது கூடுதல் கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில், மனைவியை கொலை செய்த தொழிலாளி மகாதேவ்சிங்கிற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.