சித்ரதுர்காவில் வாலிபரை கொன்ற மனைவி, கள்ளக்காதலனுடன் கைது


சித்ரதுர்காவில் வாலிபரை கொன்ற மனைவி, கள்ளக்காதலனுடன் கைது
x

சித்ரதுர்காவில், வாலிபரை கொன்ற மனைவி, அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டியது அம்பலமாகியுள்ளது.

சிக்கமகளூரு;

வாலிபர் கொலை

சித்ரதுர்கா தாலுகா கத்ரால்திம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாஷா ஷாப்(வயது 33). இவர், கடந்த 28-ந்தேதி இரவு அதே பகுதியில் சாலையோரம் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பரமசாகரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலையான பாஷா ஷாப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பாஷா ஷாப்பை கொன்றது யார் என்பது முதலில் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மனைவி கைது

இதற்கிடையே பாஷா ஷாப்பின் மனைவி பர்வீன்பானு தலைமறைவாகி இருந்தார். இதனால் சந்தேகமடைந்த பாஷா ஷாப்பின் சகோதரர் அக்ரம், பாஷா ஷாப்பின் கொலையில் பர்வீன்பானு மீது சந்தேகம் இருப்பதாக பரமசாகரா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தலைமறைவாக இருந்த பர்வீன்பானுவை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பர்வீன்பானுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக...

அதாவது பர்வீன் பானுவுக்கும், தாதாபீர் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதன்படி 2 பேரும் தனியாக சந்தித்து பேசி உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்களது கள்ளக்காதல் பாஷா ஷாப்புக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர், மனைவி பர்வீன் பானுவை கண்டித்து வந்துள்ளார்.

இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக பர்வீன் பானு, கணவர் என்றும் பாராமல் பாஷா ஷாப்பை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதுபற்றி கள்ளக்காதலன் தாதாபீரிடம் கூறியுள்ளார். அதன்படி சம்பத்தன்று பர்வீன் பானு, அவரது கள்ளக்காதலன் தாதாபீர் மற்றும் தாதாபீரின் நண்பர் ஜமீர் ஆகிய 3 பேரும் சேர்ந்து பாஷா ஷாப்பை கழுத்தை இறுக்கி கொன்று உடலை சாலையில் வீசி சென்றுவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து தாதாபீரையும், அவரது நண்பர் ஜமீரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேர் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story