திருமலை திருப்பதியில் தீவீரவாதிகள் ஊடுருவலா? - பக்தர்களை பீதியடைய வைத்த இமெயில்..!


திருமலை திருப்பதியில் தீவீரவாதிகள் ஊடுருவலா? - பக்தர்களை பீதியடைய வைத்த இமெயில்..!
x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருமலை,

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருப்பதாலும், சனி, ஞாயிறு மற்றும் மே தினம் எனத் தொடர் விடுமுறை வந்ததாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்தனர். இதனால், திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில், திருப்பதி மலையில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக திருப்பதி போலீசாருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து இமெயில் ஒன்று வந்தது. இதனால் பரபரப்பும் அதிர்ச்சியும் அடைந்த போலீசார், இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகள், தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் ஆகியோருக்கு தெரிவித்தனர். தொடர்ந்து திருப்பதி மலை முழுவதும் உயர்பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்த போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்தினர்.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பேருந்தில் பயணிக்கும் பக்தர்கள், நடந்து மலையேறி செல்லும் பக்தர்கள், ஆகியோர் உட்பட அனைத்தும் தீவிர சோதனை வளையத்திற்குள் கொண் டுவரப்பட்டுள்ளன. இது தவிர திருப்பதி மலை முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்திய போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிசிடிவி கேமராக்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திருப்பதி மாவட்ட எஸ்பி பரமேஸ்வர ரெட்டி, போலீசாருக்கு கிடைத்த இமெயில் வெறும் புரளி என்றும், எனவே பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், திருமலை திருப்பதியில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


Next Story