ஹாசன் மாவட்டத்தை தக்க வைக்குமா ஜனதா தளம்(எஸ்)?
வருகிற சட்டசபை தேர்தலில் ஹாசன் மாவட்டத்தை தக்க வைக்குமா ஜனதா தளம்(எஸ்) என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
ஹாசன் மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாநில கட்சியான ஜனதா தளம்(எஸ்) பலம் வாய்ந்த கட்சியாக வலம் வருகிறது. இங்கு கடந்த முறை நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சி கைப்பற்றி உள்ளது. மேலும் பா.ஜனதா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றி வரும் ஜனதாதளம் (எஸ்) ஹாசன் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளையும் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. இதேபோல் காங்கிரசும், செல்வாக்கு இன்றி தவிக்கும் பா.ஜனதாவும், ஜனதாதளம்(எஸ்) கட்சியை வீழ்த்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
ஹாசன்-ஒலேநரசிப்புரா
ஹாசன் தொகுதி தற்போது பா.ஜனதா வசம் உள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதாவை சேர்ந்த பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ.வாக உள்ளார். கடந்த 1994-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை நடந்த சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிட்ட பிரகாஷ், கடந்த தேர்தலில் பிரீத்தம் கவுடாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த முறை ஹாசன் தொகுதியில் பா.ஜனதா சார்பில் பிரீத்தம் கவுடா போட்டியிடுவார் என தெரிகிறது. காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஜனதாதளம்(எஸ்) சார்பில் ஹாசன் தொகுதியில் சீட் கேட்டு முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மனைவி பவானி போர்க்கொடி தூக்கி உள்ளார். இதில் குமாரசாமிக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது. அவர் உள்ளூர் தொண்டராக ஸ்வரூப் என்பவருக்கு சீட் கொடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ஒலேநரசிப்புரா தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. எச்.டி.ரேவண்ணா ஜனதா தளம்(எஸ்) சார்பில் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுவது ஏறக்குறைய உறுதி. காங்கிரஸ் சார்பில் ஸ்ரேயாஸ் பட்டேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில் போட்டியிட அந்த கட்சியின் உள்ளூர் தலைவர்கள் வாய்ப்பு கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரக்கல்கோடு-சரவணபெலகோலா
அரக்கல்கோடு தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள ஏ.டி.ராமசாமி, ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். இதனால் அவர் இந்த முறை காங்கிரஸ் சார்பில் களம் காண வாய்ப்பு உள்ளது. ஜனதாதளம்(எஸ்) சார்பில் முன்னாள் மந்திரி ஏ.மஞ்சு போட்டியிடலாம் என தெரிகிறது. சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி ஜனதா
தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்த அவர், அரக்கல்கோடு தொகுதியில் போட்டியிட 'லாபி' நடத்தி வருகிறார். பா.ஜனதா சார்பில் போட்டியிட உள்ளூர் பிரமுகர்கள் காய் நகர்த்தி வருகிறார்கள்.
சரவணபெலகோலாவில் தற்போது ஜனதாதளம்(எஸ்) சார்பில் எம்.எல்.ஏ.வாக உள்ள பாலகிருஷ்ணா மீண்டும் அந்த கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தெரிகிறது. காங்கிரஸ், பா.ஜனதா கட்சி அங்கு பலமான வேட்பாளர்களை நிறுத்த தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
சக்லேஷ்புரா-அரிசிகெரே
சக்லேஷ்புரா தொகுதியில் தற்போது ஜனதாதளம்(எஸ்) கட்சியில் எம்.எல்.ஏ.வாக உள்ள எச்.கே.குமாரசாமி மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்படலாம். காங்கிரஸ் சார்பில் முரளி மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில் உள்ளூர் தலைவர்கள் பலர் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகின்றனர். ஆனால் இன்னும் வேட்பாளர் உறுதி செய்யப்படவில்லை.
அரிசிகெரே தொகுதியில் தற்போது ஜனதா
தளம்(எஸ்) சார்பில் எம்.எல்.ஏ.வாக உள்ள
சிவலிங்கேவுடா, அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளார். இதனால் இந்த முறை அரிசிகெரே தொகுதியில் அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஜனதாதளம்(எஸ்) மற்றும் பா.ஜனதா சார்பில் போட்டியிட பலர் 'லாபி' நடத்தி வருகிறார்கள்.
பேளூர்
பேளூர் தொகுதியில் தற்போது ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த லிங்கேஷ் எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவரே மீண்டும் அங்கு களம் காண வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட பலர் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். இதனால் அங்கு பலமான வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. பா.ஜனதாவும் அங்கு பலமான வேட்பாளரை நிறுத்த தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. எனினும் கடந்த முறை தோல்வி அடைந்த சுரேசுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஜனதாதளம்(எஸ்) தக்கவைக்குமா?
கடந்த சட்டசபை தேர்தலில் 7 சட்டசபை தொகுதிகளில் 6 தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) கட்சி ஹாசன் தங்களின் கோட்டை என்று நிரூபித்து காட்டியது. ஆனால் இந்த முறை ஹாசன் மாவட்டத்தை ஜனதாதளம்(எஸ்) தக்க வைக்குமா என்பது சந்தேகம் தான். அக்கட்சியின் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர்ந்ததும், ஹாசன் தொகுதியில் சீட் கேட்டு ரேவண்ணாவின் மனைவி பவானி போர்க்கொடி உயர்த்தி இருப்பதும் அக்கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தான் தங்களின் கோட்டையான ஹாசன் மாவட்டத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சி இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. எது எப்படியோ, ஜனதாதளம்(எஸ்) கட்சி தனது கோட்டையான ஹாசனை தக்க வைக்குமா? அல்லது கோட்டை விடுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கடந்த தேர்தலில் வெற்றி-தோல்வி நிலவரம்
தொகுதி வெற்றி தோல்வி
ஹாசன் பிரீத்தம்கவுடா(பா.ஜ.க.) 63,348 பிரகாஷ்(ஜ.தளம்-எஸ்) 50,342
ஒலேநரசிப்புரா எச்.டி.ரேவண்ணா(ஜ.தளம்-எஸ்) 1,08,541 மஞ்சேகவுடா(காங்.) 64,709
அரக்கல்கோடு ஏ.டி.ராமசாமி(ஜ.தளம்-எஸ்) 85,064 ஏ.மஞ்சு(காங்.) 74,411
சரவணபெலகோலா பாலகிருஷ்ணா(ஜ.தளம்-எஸ்) 1,05,516 புட்டேகவுடா(காங்.) 52,504
சக்லேஷ்புரா எச்.கே.குமாரசாமி(ஜ.தளம்-எஸ்) 62,262 சோமசேகர் ஜெயராஜ்(பா.ஜ.க.) 57,320
அரிசிகெரே சிவலிங்கேகவுடா(ஜ.தளம்-எஸ்) 93,986 சசிதர்(காங்.) 50,320
பேளூர் லிங்கேஷ்(ஜ.தளம்-எஸ்) 64,268 சுரேஷ்(பா.ஜ.க.) 44,578