சென்னப்பட்டாணவில் வெற்றி கனியை ருசிப்பாரா குமாரசாமி?


சென்னப்பட்டாணவில் வெற்றி கனியை ருசிப்பாரா குமாரசாமி?
x

ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவராக இருப்பவர் குமாரசாமி. இவர் கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பிறகு 1998-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதேதொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினார். இதைதொடர்ந்து மாநில அரசியலில் தனது கவனத்தை திருப்பிய குமாரசாமி, கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராமநகர் மாவட்டம் சாந்தனூரு தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட்டார்.

அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் டி.கே.சிவக்குமார் 56,050 வாக்குகள் பெற்று 14,387 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமியை வீழ்த்தினார். குமாரசாமி 41,663 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதன்பிறகு கடந்த 2004-ம் ஆண்டு தொகுதி மாறி ராமநகர் தொகுதியில் போட்டியிட்ட அவர் 69,554 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட லிங்கப்பா 46,638 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 22,916 ஆகும். இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைதொடர்ந்து ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தரம்சிங்கிற்கு கொடுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த குமாரசாமி, காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை 20 மாதங்களில் திரும்பபெற்றார். மேலும் பா.ஜனதா ஆதரவுடன் அவர், முதல்-மந்திரி பதவியை ஏற்றார்.

ஆனால் அதன் பின்னர் 2008-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி படுதோல்வி அடைந்தது. மேலும் அந்த தேர்தலில் மீண்டும் ராமநகர் தொகுதியில் களம் இறங்கிய குமாரசாமி 71,700 வாக்குகள் பெற்று வெற்றி மகுடம் சூடினார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் நின்ற ருத்ரேவ் 22,440 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். வாக்கு வித்தியாசம் 49,260 ஆகும். 2013-ம் ஆண்டு தேர்தலில் 3-வது முறையாக அதேதொகுதியில் களம் இறங்கிய குமாரசாமி 25,398 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மரியதேவருவை வீழ்த்தினார். 83,447 வாக்குகளை குமாரசாமியும், 58,049 வாக்குகளை மரியதேவரும் பெற்றிருந்தனர்.

கடந்த சட்டசபை தேர்தலிலும் ராமநகர் தொகுதியில் போட்டியிட்டு குமாரசாமி வெற்றி பெற்றார். மேலும் சென்னப்பட்டணா தொகுதியிலும் போட்டியிட்டு பா.ஜனதாவின் சி.பி.யோகேஷ்வரை 21,530 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குமாரசாமி 87,995 வாக்குகளும், சி.பி.யோகேஷ்வர் 66,465 வாக்குகளும் பெற்றனர். பின்னர்

ராமநகர் தொகுதியில் ராஜினாமா செய்த அவர், சென்னப்பட்டணாவில் எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார்.

இந்த நிலையில் வருகிற சட்டசபை தேர்தலில் மீண்டும் குமாரசாமி சென்னபட்டணா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் சி.பி.யோகேஷ்வர் களமிறங்குகிறார். கடந்த முறை குமாரசாமியிடம் தோல்வியை தழுவிய சி.பி.யோகேஷ்வர், இந்த முறை அவரை வீழ்த்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் சென்னப்பட்டணாவில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு சி.பி.யோகேஷ்வரை ஆதரித்து பிரசாரம் செய்தார். இதனால் சென்னப்பட்டணா தொகுதியில் வெற்றி பெறப்போவது

யார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் சார்பில் கங்காதர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியை தாண்டி சென்னப்

பட்டணாவில் குமாரசாமி மீண்டும் வெற்றி கனியை ருசிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க

வேண்டும்.


Next Story