வருணாவில் சித்தராமையாவுக்கு சவால் அளிப்பாரா சோமண்ணா?


வருணாவில் சித்தராமையாவுக்கு சவால் அளிப்பாரா சோமண்ணா?
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் கவனத்தை ஈர்த்துள்ள தொகுதிகளில் வருணாவும் ஒன்று. மைசூரு மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதி கடந்த 2008-ம் தொகுதி மறுசீரமைப்பின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டதாகும். அதாவது சாமுண்டீஸ்வரி தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு வருணா தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இதுவரை அங்கு 3 தேர்தல்கள் நடந்துள்ளது. 2008 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவும், கடந்த ஆண்டு நடந்த ேதர்தலில் அவரது மகன் யதீந்திரா சித்தராமையாவும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் 48 ஆயிரம் பேர் வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தையும், 35 ஆயிரம் பேர் ஆதிதிராவிடர் சமுதாயத்தையும், 27 ஆயிரம் பேர் பழங்குடியின சமுதாயத்தையும், 25 ஆயிரம் பேர் குருபா சமுதாயத்தையும், 6,500 பேர் ஒக்கலிக சமுதாயத்தையும், 45 ஆயிரம் பேர் பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். இங்கு 10 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளும் உள்ளன.

இந்த தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க காரணம், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மீண்டும் வருணாவில் போட்டியிடுகிறார். கடந்த 1983-ம் ஆண்டு சாமுண்டீஸ்வரி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சித்தராமையா, 1985-ம் ஆண்டு ஜனதா கட்சியில் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1994 மற்றும் 2004-ம் ஆண்டு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் காங்கிரசில் சேர்ந்த அவர், 2006-ம் ஆண்டு நடந்த இடைேதர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு சாமுண்டீஸ்வரி தொகுதியில் இருந்து பிரிந்து வருணா ெதாகுதி உருவாக்கப்பட்டது. அதுவரை சாமுண்டீஸ்வரியில் போட்டியிட்டு வந்த சித்த

ராமையா, 2008 மற்றும் 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வருணாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கடந்த சட்டசபை தேர்தலில் வருணாவை தனது மகனுக்காக விட்டு கொடுத்துவிட்டு அரசியல் வாழ்க்கை கொடுத்த சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டி யிட்டு ஜனதாதளம்(எஸ்) வேட்பாளா் ஜி.டி.தேவேகவுடாவிடம் தோல்வியை தழுவினார். இந்த முறை கோலார் தொகுதியில் போட்டியிட அவர் முடிவு செய்திருந்தார். ஆனால் கோலார் தொகுதி பாதுகாப்பானது இல்லை என்பதால் வருணாவில் போட்டியிடும்படி கட்சி மேலிடம் அவரை வலியுறுத்தியது. இதனால் அவர் மீண்டும் வருணாவில் கால் பதித்துள்ளார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் வீட்டு வசதித்துறை மந்திரி வி.சோமண்ணா நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் வருணா தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.

முதல்-மந்திரி பதவி மீது கண் வைத்துள்ள சித்தராமையா, இது தான் தனது கடைசி தேர்தல் என்று அறிவித்துவிட்டார். இதனால் அவர் வருணாவில் வெற்றி பெற்று, காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைத்தால் நிச்சயம் முதல்-மந்திரி அரியணையில் ஏறுவார் என்பதில்

சந்தேகம் இல்லை.

ஆனால் இந்த முறை அந்த வெற்றி அவருக்கு எளிதாக கிடைக்காது என்பது மட்டுமே உறுதியாக தெரிகிறது. அவரது வெற்றியை தடுக்க சோமண்ணாவை பா.ஜனதா அங்கு களமிறக்கி உள்ளது. வருணா சித்தராமையாவின் கோட்டையாக இருந்தாலும், அங்கு லிங்காயத் சமுதாய மக்கள் வெற்றி-தோல்வியை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். இது லிங்காயத் சமூகத்தை சேர்ந்த சோமண்ணாவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் சாமுண்டீஸ்வரியல் சித்தராமையாவை வீழ்த்தியது போன்று இந்த முறை வருணாவில் அவரை சாய்க்க பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் கங்கணம் கட்டி வருகிறார்கள்.

அத்துடன் சித்தராமையாவை வருணாவில் முடக்கி மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய விடாமல் செய்ய வேண்டும் என்பதும் பா.ஜனதாவின் மற்றொரு திட்டமாகும். அதாவது, தனது நகைச்சுவை, நக்கல்-நையாண்டி பேச்சால் அனைவரையும் தன் பக்கம் கவர்ந்திழுக்கும் வல்லமை படைத்தவர் சித்தராமையா. அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தால் காங்கிரசுக்கு பலம் அதிகரிக்கும். கூடுதல் இடங்களில் வெற்றி கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் சித்தராமையாவை வருணாவிலேயே முடக்கிவிட்டு வெளிப்பகுதியில் பிரசாரம் செய்ய விடாமல் தடுத்தால் தங்களுக்கு லாபம் தான் என்று பா.ஜனதா கணக்கீடுகிறது. ஜனதாதளம்(எஸ்) கட்சி வருணாவில் கடந்த முறை 3-வது இடம் பிடித்த அபிஷேக்கை மீண்டும் வேட்பாளராக அறிவித்தது. மேலும் வருணாவில் சித்தராமையாவுக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சி மறைமுக ஆதரவு வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனெனில் அந்த தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர் அபிஷேக் இன்னும் பிரசாரத்தை தொடங்காமல் ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சி அவரை மாற்றிவிட்டு பாரதி சங்கர் என்பவருக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது. எது எப்படியோ, சித்தராமையா வருணாவில் தனது செல்வாக்கை நிரூபிப்பதுடன் மாநிலத்தில் காங்கிரசை ஆட்சி கட்டிலில் அமர்த்துவாரா? சித்தராமையாவுக்கு சோமண்ணா சவால் அளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Next Story