தேசிய கட்சி விரைவில் தொடக்கம்! - தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ்


தேசிய கட்சி விரைவில் தொடக்கம்! - தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ்
x
தினத்தந்தி 11 Sep 2022 2:58 PM GMT (Updated: 11 Sep 2022 3:00 PM GMT)

தேசிய கட்சியை விரைவில் தொடங்க இருப்பதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

தேசிய கட்சியை விரைவில் தொடங்க இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு எதிராக ஒரு வலிமையான முன்னணியை உருவாக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சந்திரசேகர் ராவ் முயற்சித்து வருகிறார். மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சிக்கும் சந்திரசேகர் ராவ், சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை பாட்னாவில் சந்தித்து (பாஜக முக்த் பாரத்)பாஜக இல்லாத இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், சந்திரசேகர் ராவ் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ செய்திக்குறிப்பில், தேசிய செயல்திட்டங்களுடன் கூடிய ஒரு தேசிய கட்சியை தொடங்குவது தொடர்பாக மிக நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு அதில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

அறிஞர்கள், பொருளாதார வல்லுநர்கள், பல்வேறு துறை சார் நிபுணர்கள் என பலரிடமும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தெலங்கானா இயக்கம் தொடங்குவதற்கு முன்பு, தீவிர ஆலோசனை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டதோ அதேபோல தற்போது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பாரத் ராஷ்திரிய சமிதி' (பிஆர்எஸ்), 'உஜ்வல் பாரத் கட்சி' மற்றும் 'நயா பாரத் கட்சி' போன்ற சில பெயர்கள் புதிய கட்சிக்காக விவாதிக்கப்பட்டுள்ளன. குஜராத், கர்நாடகா மாநிலங்களில் வரப்போகும் சட்டசபை தேர்தல்களில் தனது புதிய கட்சியை போட்டியிட வைக்க சந்திரசேகர் ராவ் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதனிடையே, கர்நாடக முன்னாள் முதல் மந்திரியும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவருமான குமாரசாமி, சந்திரசேகர் ராவை இன்று சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story