ஜெயநகரில் மீண்டும் வெற்றி கொடி நாட்டுவாரா சவுமியா ரெட்டி?


ஜெயநகரில் மீண்டும் வெற்றி கொடி நாட்டுவாரா சவுமியா ரெட்டி?
x

வடக்கு பெங்களூரு பகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் ஒன்று ஜெயநகர் தொகுதி. இங்கு கடந்த 1978-ம் ஆண்டு முதல் கடந்த 2018-ம் ஆண்டு வரை நடந்த 10 சட்டசபை தேர்தல்களில் ஜனதா கட்சி 3 முறையும், காங்கிரஸ் 5 முறையும், பா.ஜனதா 2 முறையும் வெற்றி பெற்று உள்ளன.

ஜெயநகர் தொகுதியில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 4 ஆண்களும், 1 லட்சத்து 2 ஆயிரத்து 710 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 15 பேரும் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவர். மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 729 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 1985-ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் 5 முறை களமிறங்கி உள்ள மந்திரி ராமலிங்க ரெட்டி 4 முறை வெற்றியும், ஒரு முறை தோல்வியும் அடைந்து உள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின் போது புதிதாக உருவாக்கப்பட்ட பி.டி.எம். லே-அவுட் தொகுதியில் மந்திரி ராமலிங்க ரெட்டி காங்கிரஸ் சார்பில் தொகுதி மாறி போட்டியிட்டார். அப்போது இருந்து ஜெயநகர் தொகுதி பா.ஜனதா கட்சியின் வசமானது. இங்கு கடந்த 2 முறை நடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த பி.என்.விஜயகுமார் ெவற்றி பெற்றார். கடந்த தேர்தலில் ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராமலிங்கரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில், பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம்நகர், பைரசந்திரா, ஜெயநகர் கிழக்கு, குருபரனபாளையா, ஜே.பி.நகர், சாரக்கி, சாகாம்பரி நகர் ஆகிய 7 வார்டுகள் உள்ளன. இதில் 5 வார்டுகள் பா.ஜனதா கட்சியிடமும், 2 வார்டுகள் காங்கிரஸ் கட்சியிடமும் உள்ளது.

இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக உள்ள சவுமியா ரெட்டி ஏராளமான வளர்ச்சி பணிகள் மேற்கொண்டு உள்ளதால் அது அவருக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

இதேபோல் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு அதிகமாக உள்ளதாகவும், அதை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. மேற்கண்ட பிரச்சினைகள், சவுமியா ரெட்டிக்கு பாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சவுமியா ரெட்டி மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில் சி.கே.ராமமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் காளேகவுடா களம் காண்கிறார். கடந்த முறை சுமார் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் சவுமியா ரெட்டி வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை அவரை வீழ்த்த பா.ஜனதா வியூகம் அமைத்து வருகிறது.

இந்த தொகுதியில் அதிருப்திகளை எல்லாம் சமாளித்து இங்கு காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றிக்கொடி நாட்டுவாரா? என்பது தேர்தல் முடிவு அன்று தெரிந்து விடும்.

கடந்த தேர்தல்களில் வெற்றி-தோல்வி நிலவரம்

2008-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் இதுவரை 2 சட்டசபை தேர்தல்கள் நடந்து உள்ளன. அதன் முடிவுகள் பின்வருமாறு:-

ஆண்டு வெற்றி தோல்வி

1978 சந்திரசேகர்(ஜனதா கட்சி)-35,209 சத்தியநாராயணா (காங்.(இ))-17,941

1983 சந்திரசேகர்(ஜ.க.)-37,687 மல்லூர் ஆனந்தராவ்(காங்.)-19,381

1985 சந்திரசேகர்(ஜ.க.)-42,391 ராமலிங்கரெட்டி(காங்.)-29,842

1989 ராமலிங்கரெட்டி(காங்.)-37,836 சந்திரசேகர்(ஜ.க.)-20,655

1994 ராமலிங்கரெட்டி(காங்.)-43,215 கே.என்.சுப்பய்யா ரெட்டி(பா.ஜனதா)- 40,656

1999 ராமலிங்கரெட்டி(காங்.)-67,604 பி.என்.விஜயகுமார்(பா.ஜனதா)-53,673

2004 ராமலிங்கரெட்டி(காங்.)-54,078 பி.என்.விஜயகுமார்(பா.ஜனதா)-51,428

2008 பி.என்.விஜயகுமார்(பா.ஜனதா)-43,164 எம்.சுரேஷ்(காங்.)- 20,570

2013 பி.என்.விஜயகுமார்(பா.ஜனதா)-43,990 எம்.சி.வேணுகோபால்(காங்.)-31,678

2018 சவுமியா ரெட்டி(காங்.) 53,000 பிரகலாத்(பா.ஜ.க.) 51,568


Next Story