சி.வி.ராமன் நகர் தொகுதியில் தமிழர் ஆனந்த்குமார் வெற்றி பெறுவாரா?


சி.வி.ராமன் நகர் தொகுதியில் தமிழர் ஆனந்த்குமார் வெற்றி பெறுவாரா?
x

பெங்களூருவில் தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் சட்டசபை தொகுதிகளில் சி.வி.ராமன் நகரும் ஒன்று. கன்னடம், தெலுங்கு மொழி பேசும் மக்களும் பெருமளவு வசித்து வருகிறார்கள். புகழ்பெற்ற விஞ்ஞானியின் பெயரை நினைவு கூறும் வகையில் உள்ள சி.வி.ராமன் நகர் தொகுதியானது பெங்களூரு மாநகராட்சியின் 7 வார்டுகளை உள்ளடக்கியது. இந்த தொகுதியில் உள்ள பென்னிகானஹள்ளி, சி.வி.ராமன் நகர், ஒசதிப்பசந்திரா, சர்வக்ஞ நகர், ஒய்சாலா நகர், ஜீவன்பீமா நகர், கோனேனஅக்ரஹாரா ஆகிய 7 வார்டுகள் உள்ளன.

சி.வி.ராமன் நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்துக்கு 67 ஆயிரத்து 317 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 612 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 26 ஆயிரத்து 588 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தினர் 117 பேரும் அடங்குவர். இந்த சட்டசபை தொகுதியில் மக்கள் பிரச்சினை தொடர்ந்து நிலவுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. தண்ணீர் பிரச்சினை, அறிவிக்கப்படாத மின்வெட்டு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சில பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாதது போன்றவை முக்கிய பிரச்சினையாக உள்ளன.

2008-ம் ஆண்டு உதயமான சி.வி.ராமன் நகர் தொகுதி 3 சட்டசபை தேர்தல்களை சந்தித்துள்ளது. இந்த 3 தேர்தல்களிலும் பா.ஜனதா கட்சியே வெற்றி பெற்றுள்ளது. 2008 மற்றும் 2018-ம் ஆண்டு தேர்தல்களில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ரகு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். வருகிற தேர்தலிலும் பா.ஜனதா சார்பில் ரகு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மேயர் சம்பத்ராஜ் டிக்கெட் கேட்டு வந்தார். ஆனால் கட்சி மேலிடம் அவருக்கு பதிலாக ஆனந்த்குமார் என்பவருக்கு டிக்கெட் வழங்கி உள்ளது. தமிழரான ஆனந்த்குமார் முன்னாள் கவுன்சிலா் மற்றும் நிலைக்குழு தலைவராக இருந்துள்ளார். சி.வி.ராமன்நகர் தொகுதியில் கணிசமாக தமிழர்கள் வசிப்பதால், தமிழரான ஆனந்த்குமாருக்கு காங்கிரஸ் மேலிடம் சீட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனதாதளம்(எஸ்) சார்பில் இங்கு வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. அந்த கட்சி, சி.வி.ராமன்நகர் தொகுதியில் இந்திய குடியரசு கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 3 முறை ரகு எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் தொகுதியில் பெரிய அளவில் வளர்ச்சி பணி மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை அந்த பகுதி மக்கள் முன்வைக்கிறார்கள். இது முரளிக்கு பாதகமாக பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் பா.ஜனதாவுக்கு நிகரான வாக்காளர்கள் இந்த தொகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட தமிழருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பெங்களூரு சி.வி.ராமன் நகர் தொகுதியில் ஆனந்த்குமாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதால் தமிழர்கள் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இதுவும் காங்கிரஸ் கட்சிக்கும், வேட்பாளர் ஆனந்த்குமாருக்கும் பலமாக இருக்கும். இதுபோன்ற சாதக, பாதகங்கள் இருந்தாலும் கூட வருகிற தேர்தலில் சி.வி.ராமன் நகர் தொகுதியில் யாரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது அந்த தொகுதி வாக்காளர்களின் கையில் தான் உள்ளது என்பது தான் நிதர்சனம்.

கடந்த தேர்தல்களில் வெற்றி-தோல்வி நிலவரம்

சி.வி.ராமன் நகர் சட்டசபை தொகுதியில் கடந்த 2008 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல் முடிவுகளின் விவரம் வருமாறு:-

ஆண்டு வெற்றி தோல்வி

2008 ரகு(பா.ஜனதா)-47,369 விஜயகுமார்(காங்.)-30,714

2013 ரகு(பா.ஜனதா)-53,364 பி.ரமேஷ்(காங்.)-44,945

2018 ரகு(பா.ஜனதா)-58,887 சம்பத்ராஜ்(காங்.)-46,660


Next Story