பாகல்கோட்டையை மீண்டும் முழுமையாக கைப்பற்றுமா பா.ஜனதா?


பாகல்கோட்டையை மீண்டும் முழுமையாக கைப்பற்றுமா பா.ஜனதா?
x

பாகல்கோட்டையை மீண்டும் பா.ஜனதா முழுமையாக கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வட கர்நாடக மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான மாவட்டம் பாகல்கோட்டை. இந்த மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவை முதோல்(எஸ்.சி.), திரதாலா, ஜமகண்டி, பீலகி, பாதாமி, பாகல்கோட்டை, உனகுந்தா ஆகியவை ஆகும். கடந்த 2008-ம் ஆண்டு பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளையும் பா.ஜனதா கைப்பற்றி இருந்தது.

ஆனால் 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 7-ல் 6 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றியது. அந்த தேர்தலில் பா.ஜனதா 5 தொகுதிகளையும், காங்கிரஸ் 2 தொகுதிகளையும் கைப்பற்றின. மேலும் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 7 தொகுதிகளையும் சேர்த்து பா.ஜனதா 45.7 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. காங்கிரஸ் 40.5 சதவீத வாக்குகளை அறுவடை செய்திருந்தது. அதற்கு அடுத்தபடியாக சுயேச்சைகள் 7.8 சதவீத வாக்குகளை பெற்று இருந்தனர். ஜனதா தளம்(எஸ்) கட்சி 3.9 சதவீத வாக்குகளும், பிரஜா பரிவர்த்தன் கட்சி 0.5 சதவீத வாக்குகள் பெற்று இருந்தன.

முதோல் - திரதாலா

முதோல் தொகுதியில் தற்போது நீர்ப்பாசன துறை மந்திரியாக உள்ள கோவிந்த் கார்ஜோள் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். கடந்த 2013 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் இதே தொகுதியில்தான் கோவிந்த் கார்ஜோள் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு தன்னை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பண்டிவத்தார் சதீஷ் சின்னப்பா என்பவரை 15 ஆயிரத்து 482 வாக்குகள் வித்தியாசத்தில் கோவிந்த் கார்ஜோள் தோற்கடித்து இருந்தார். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் கோவிந்த் கார்ஜோளை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ராமப்பா பாலப்பா திம்மாப்பூர் களம் காண்கிறார்.

திரதாலா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சித்து சவதி. கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை உமாஸ்ரீயை எதிர்த்து பா.ஜனதா சார்பில் களம் கண்ட சித்து சவதி அப்போது 20 ஆயிரத்து 889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் சித்த சவதியே இத்தொகுதியில் பா.ஜனதா சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஆனந்த் சித்து நியாமகவுடா களம் காண்கிறார். அதுபோல் முதன்முதலாக கர்நாடக சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அர்ஜூன் ஹலகிகவுடர் போட்டியிடுகிறார்.

ஜமகண்டி-பீலகி

ஜமகண்டி தொகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் ஆனந்த் சித்து நியாமகவுடா போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் குல்கர்னி ஸ்ரீகாந்த் சுப்ராவ் என்பவரை 389 ஆயிரத்து 480 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால் இந்த முறை இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் யாரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. நடிகை உமாஸ்ரீ போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. பா.ஜனதா சார்பில் இத்தொகுதியில் ஜெகதீஷ் குடகுந்தி போட்டியிட உள்ளார்.

பீலகி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஜே.டி.பட்டீல். காங்கிரசை சேர்ந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று இருந்தார். நடைபெற உள்ள தேர்தலிலும் இத்தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் ஜே.டி.பட்டீல் களம் காண்கிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் முருகேஷ் ருத்ரப்பா நிரானி போட்டியிடுகிறார். பா.ஜனதாவின் மூத்த தலைவரான இவர் தற்போது தொழில்துறை மந்திரியாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி சார்பில் முத்தப்பா கோமர் போட்டியில் உள்ளார்.

பாதாமி-பாகல்கோட்டை-உனகுந்தா

பாதாமி தொகுதியில் தற்போது காங்கிரசின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா எம்.எல்.ஏ.வாக உள்ளார். ஆனால் இந்த முறை சித்தராமையா மைசூரு மாவட்டத்தில் உள்ள வருணா தொகுதியில் போட்டியிடுவதால், இங்கு பீமாசென் பி.சிம்மனகட்டி என்பவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவர் தான் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். சித்தராமையாவுக்காக அவர் கடந்த 2019-ம் ஆண்டு தொகுதியை விட்டுக் கொடுத்திருந்தார். இந்த முறை மீண்டும் அவருக்கே காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி இருக்கிறது. அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் சாந்தா கவுடா பட்டீல், ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ஹனுமந்தப்பா பி.மாவினமரடி, ஆம் ஆத்மி சார்பில் சிவராயப்பா ஜோகின் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பாகல்கோட்டை எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் பா.ஜனதாவைச் சேர்ந்த வீரபத்ரப்பா சரண்டிமத். அவரே இந்த முறையும் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி எச்.ஒய்.மேட்டி களம் காண்கிறார். மேலும் ஆம் ஆத்மி சார்பில் ரமேஷ் பாதனூர் என்பவரும் போட்டியில் உள்ளார்.

உனகுந்தா தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் தொட்டண்ண கவுடா ஜி.பட்டீல். பா.ஜனதாவைச் சேர்ந்த இவர் இந்த முறையும் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் வினயானந்தா காசப்பனவர் போட்டியிடுகிறார். கடந்த 2013-ம் ஆண்டு இத்தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயானந்தா காசப்பனவர், 2018-ம் ஆண்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகல்கோட்டை மாவட்டத்தை காங்கிரசும், பா.ஜனதாவும் மாறி, மாறி கைப்பற்றி வரும் நிலையில் இந்த முறை மீண்டும் அதிக தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறுமா அல்லது காங்கிரஸ் கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த தேர்தலில் வெற்றி தோல்வி நிலவரம்

தொகுதி வெற்றி தோல்வி

முதோல் கோவிந்த் கார்ஜோள்(பா.ஜனதா) 76,431 பண்டிவத்தார் சதீஷ் சின்னப்பா(காங்.) 60,949

திரதாலா சித்து சவதி(பா.ஜனதா) 87,213 உமாஸ்ரீ(காங்.) 66,324

ஜமகண்டி ஆனந்த் சித்து நியாமகவுடா(காங்.) 97,017 குல்கர்னி ஸ்ரீகாந்த் சுப்ராவ்(பா.ஜனதா) 57,537

பீலகி முருகேஷ் ருத்ரப்பா நிரானி(பா.ஜனதா) 85,135 ஜே.டி.பட்டீல்(காங்.) 80,324

பாதாமி சித்தராமையா(காங்.) 67,599 ஸ்ரீராமுலு(பா.ஜனதா) 65,903

பாகல்கோட்டை வீரபத்ரய்யா சரண்டிமத்(பா.ஜனதா) 85.653 எச்.ஒய்.மேட்டி(காங்.) 69,719

உனகுந்தா தொட்டண்ணாகவுடா ஜி.பட்டீல்(பா.ஜ.க.) 65,012 விஜயானந்தா காசப்பனவர்(காங்.) 59,785


Next Story