சில்க்யாரா சுரங்கப்பாதையில் பணி தொடங்குமா? அல்லது தாமதமாகுமா?


சில்க்யாரா சுரங்கப்பாதையில் பணி தொடங்குமா? அல்லது தாமதமாகுமா?
x

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் முழு மருத்துவ பரிசோதனையை முடித்துக்கொண்டு நேற்று வீடு திரும்பினர்.

சில்க்யாரா,

சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக மீட்கப்படுவார்களா? என்பது சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சக தொழிலாளர்களின் பெரும் கவலையாக இருந்து வந்தது. 17 நாட்களுக்கு பிறகு 41 தொழிலாளர்களும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ரிஷிகேஷ் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நேற்று வீடு திரும்பினர்.

இந்த நிலையில் சில்க்யாரா சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மற்ற தொழிலாளர்கள் பலரும், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்குமா அல்லது தாமதமாகுமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

தற்போதைக்கு ஓய்வில் இருக்கும்படி மட்டுமே ஒப்பந்த நிறுவனம் அறிவுறுத்தியிருப்பதாகவும், பணி தொடங்குமா? தாமதமாகுமா? என்ற இழுபறியோடு தாங்கள் இந்த பகுதியில் இருப்பதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். நிலச்சரிவு போன்ற அபாயங்கள் நிறைந்த பணியில் ஈடுபட வேண்டாம் என்று தங்கள் உறவினர்கள் வலியுறுத்துவதாகவும், வேலையை விட்டுவிட்டு உடனடியாக வீடு திரும்பும்படி அழைப்பதாகவும் சில தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் சில தொழிலாளர்கள், விடுப்பு கடிதம் எழுதி வைத்துக்கொண்டு, அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு திரும்பலாமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இன்னும் சில தொழிலாளர்களோ, பணி தொடங்கினால் செய்ய தயாராக இருப்பதாகவும், தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால் வீட்டுக்கு சென்று வருவதில் ஆர்வத்துடன் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

அதே சமயம் அதிகாரிகளோ, சுரங்கப்பாதை அமைக்கும் பகுதியில், பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அனுமதி கிடைத்த பிறகே பணிகள் தொடங்கப்படும் என்று கூறுகின்றனர். ஒரே அறையில் 4 முதல் 5 தொழிலாளர்கள் வரை தங்கியிருப்பதாகவும், அவர்களின் உணவுக்கான செலவை ஒப்பந்த நிறுவனங்கள் வழங்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story