வருணா தொகுதியில் போட்டியிடும்படி மந்திரி சோமண்ணாவுடன், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பேச்சுவார்த்தை
வருணா தொகுதியில் போட்டியிடும்படி மந்திரி சோமண்ணாவுடன், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மைசூரு மாவட்டம் வருணாவில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சித்தராமையாவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது. விஜயேந்திராவை நிறுத்த பா.ஜனதா முதலில் முடிவு செய்தது. இதற்கு எடியூரப்பா எதிர்ப்பு தெரிவித்ததால், லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவரான மந்திரி சோமண்ணாவை நிறுத்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு சோமண்ணா எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வைத்து நேற்று முன்தினம் மந்திரி சோமண்ணாவிடம் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும், மாநில தலைவர் நளின்குமார் கட்டீலும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
சித்தராமையாவை தோற்கடிக்க நீங்கள் வருணாவில் போட்டியிட வேண்டும் என்று சோமண்ணாவிடம் தலைவர்கள் கூறியுள்ளனர். வருணாவில் போட்டியிடுவது குறித்து தற்போதே எதுவும் சொல்ல முடியாது என்றும், இதுபற்றி யோசித்து கூறுவதாகவும் சோமண்ணா கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மந்திரி சோமண்ணா சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் போட்டியிடவும், அவரது மகனை பெங்களூரு கோவிந்தராஜ்நகர் தொகுதியில் நிறுத்தவும் தயாராகி வருகிறார். மந்திரி சோமண்ணாவின் மகனுக்கு சீட் கொடுப்பது பற்றி பா.ஜனதா மேலிடம் இதுவரை எந்த முடிவும் தெரிவிக்காததால் சோமண்ணாவும் அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது.