தேர்தல் அரசியலில் இருந்து விலகல்:ஈசுவரப்பா வீட்டு முன்பு திரண்ட ஆதரவாளர்கள்


தேர்தல் அரசியலில் இருந்து விலகல்:ஈசுவரப்பா வீட்டு முன்பு  திரண்ட ஆதரவாளர்கள்
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் அரசியலில் இருந்து விலகியதால் ஈசுவரப்பா வீட்டு முன்பு திரண்ட ஆதரவாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு-

பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக கன்னட தொலைக்காட்சிகளில் தகவல்கள் வெளியானது. இதை பார்த்ததும் அவரது ஆதரவாளர்களும், பா.ஜனதா தொண்டர்களும் சிவமொக்கா டவுன் குண்டப்பா ஷெட் பகுதியில் உள்ள ஈசுவரப்பாவின் வீட்டு முன்பு திரண்டு வந்தனர்.

அவர்கள், ஈசுவரப்பா மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஈசுவரப்பா அரசியலில் இருந்து விலக கூடாது என கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதையடுத்து ஈசுவரப்பாவும், அவரது மகன் காந்தேசும் வீட்டு முன்பு கூடியிருந்த ஆதரவாளர்கள் முன்பு வந்தனர். அப்போது ஆதரவாளர்கள் ஈசுவரப்பா வாழ்க... ஈசுவரப்பாவுக்கு டிக்கெட் வழங்க வேண்டும்... அரசியலில் இருந்து விலக கூடாது எனவும், பா.ஜனதா மேலிடம் ஈசுவரப்பாவுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் ஆவேசமாக கோஷம் எழுப்பினர். ஆதரவாளர்களை அவர்கள் சமாதானப்படுத்தினர். பின்னர் ஈசுவரப்பா பேசுகையில், தேர்தல் அரசியலில் இருந்து விலக எடுத்த முடிவு நான் சொந்தமாக எடுத்தது. இதற்கு கட்சி மேலிடம் காரணம் அல்ல. வேறும் யாரும் என்னை ராஜினாமா செய்ய நிர்பந்தம் செய்யவில்லை. எனவே அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றார்.

முன்னதாக அவரது ஆதரவாளர்கள் குண்டப்பா ஷெட் சர்க்கிளில் டயரை தீவைத்து எரித்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிவமொக்கா டவுனில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

1 More update

Next Story