வீட்டில் தீ விபத்து: தாய் மற்றும் 4 குழந்தைகள் உயிரிழப்பு


வீட்டில் தீ விபத்து: தாய் மற்றும் 4 குழந்தைகள் உயிரிழப்பு
x

உத்தரபிரதேசத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி பெண் மற்றும் அவரது நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோரக்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 30 வயது மாற்றுத்திறனாளி பெண் மற்றும் அவரது நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நேற்று பிற்பகலில் மகி மதியா கிராமத்தில் உள்ள ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ விரைவில் சாலையின் குறுக்கே இருந்த மூன்று வீடுகளுக்கும் பரவியது. அப்போது ஷேர் முகமது என்பவரது மாற்றுத்திறனாளி மனைவி பாத்திமா மற்றும் அவர்களது நான்கு குழந்தைகள் ரோகி (6), அமினா (4), ஆயிஷா (2), மற்றும் இரண்டு மாத குழந்தை கதீஜா ஆகியோர் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தனர்.

அறையின் நுழைவாயிலில் தீ பரவியதையடுத்து அந்த பெண் தப்பிக்க முயன்றார். ஆனால் அவர்கள் அனைவரும் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணின் மாமனார் ஷபீக் (70), மாமியார் மோதிராணி (67) இருவரும் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் இந்த தீ விபத்தில் அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரும் காயமடைந்தார்.

மூவரும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் மாவட்ட மாஜிஸ்திரேட் ரஞ்சன் கூறியுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story