நான் பார்வதி தேவியின் அவதாரம் என்று கூறி சீன எல்லையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இளம்பெண்ணால் பரபரப்பு!


நான் பார்வதி தேவியின் அவதாரம் என்று கூறி சீன எல்லையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இளம்பெண்ணால் பரபரப்பு!
x

கைலாயத்தில் இருக்கும் சிவபெருமானை மணம் புரியவே இங்கு வந்தேன். அங்கிருந்து வர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

டேராடூன்,

உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியில் இருந்து 27 வயது பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் மே 10ம் தேதியன்று, இந்திய-சீன எல்லை பகுதிக்கு அருகில் உள்ள தடைசெய்யப்பட்ட பகுதியான நபிதாங்கிற்கு சென்றார்.

அவர் தனது தாயாருடன் கைலாஷ்-மானசரோவர் செல்லும் வழியில் உள்ள குஞ்சி பகுதிக்கு சென்றுள்ளார். ஓம் பர்வத மலை பகுதியை பார்வையிட இருவரும் உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி கோரினர். அவர்களுக்கு தார்ச்சுலா எஸ்டிஎம் மூலம் இன்னர்-லைன் அனுமதி வழங்கப்பட்டது. அது தடைசெய்யப்பட்ட பகுதி என்பதால் உள்ளூர் நிர்வாகத்திடமிருந்து அப்பகுதியை பார்வையிட15 நாட்கள் அனுமதி பெற்று இருவரும் சென்றுள்ளனர்.

இருவரும் தார்ச்சுலா சப்-டிவிஷனின் கலாபானி பகுதிக்கு அருகில் உள்ள நாபிடாங் கிராமத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர்.

அவருக்கு சுற்றுலா செல்லும் பொருட்டு, 15 நாட்களுக்கு காலக்கெடுவுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மே 24ம் தேதியுடன் அந்த அனுமதி உரிமம் காலாவதியாகிவிட்டது.இந்நிலையில், காலக்கெடு முடிந்தும் அவர் அப்பகுதியில் முகாமிட்டிருந்தார்.

இதனையடுத்து இந்தோ திபெட் எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் இருவரும் செல்ல மறுத்துவிட்டனர்.

அவர்களிடம் ஹர்மீத் கவுர் என்ற அந்த பெண், தான் "தெய்வத்தின் அவதாரம். பார்வதி தேவியின் அம்சமாக நான் பூமியில் அவதரித்துள்ளளேன். சிவபெருமானின் தரிசனத்திற்காக இங்கு வந்துள்ளேன். கைலாயத்தில் இருக்கும் சிவபெருமானை மணம் புரியவே இங்கு வந்தேன்" எனக் கூறினார். அங்கிருந்து வர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

பின்னர் போலீஸ் குழு ஒன்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் அந்த பெண்ணின் தாயார் அங்கிருந்து கிளம்ப சம்மதம் தெரிவித்தார்.ஆனால் அந்த பெண் அடம்பிடித்தார். தன்னை வற்புறுத்தினால் இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார்.

இதனை தொடர்ந்து மருத்துவர் உடன் கூடிய குழு ஒன்று அனுப்பப்பட்டு, அங்கிருந்து அவரை வலுக்கட்டாயமாக மீட்டு கொண்டு வந்துள்ளது. அவருடைய மனநிலை சரியில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தார்ச்சுலாவில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story