வாட்ஸ்-அப்பில் ப்ளாக் செய்ததால் காதலன் வீட்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!
வாட்ஸ்-அப்பில் தன்னை ப்ளாக் செய்த காதலன் வீட்டுக்குச் சென்று இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
மும்பை அருகே வாட்ஸ்-அப்பில் தன்னை ப்ளாக் செய்த காதலன் வீட்டுக்குச் சென்று இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் புறநகர் பகுதியான தஹிசர் பகுதியில், ரெயில்வே இருப்புப்பாதை அருகே உள்ள குடியிருப்பில் வசிக்கும் 27 வயது இளைஞரும், 20 வயதான பிரணாலி லோகரே என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, இருவரும் ஒரு திருமணத்துக்கு சென்றனர். அப்போது அந்த இளைஞரின் வீட்டில் தங்குவதற்கு அந்த பெண் விருப்பம் தெரிவித்ததாகவும், அதை அந்த இளைஞர் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து தன் வீட்டுக்குச் சென்ற அந்த பெண், தனது காதலரை அழைத்து அவரது வீட்டுக்கு வர விரும்புவதாக மீண்டும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பகுதியில் போதைக்கு அடிமையானவர்கள் இரவு நேரங்களில் சுற்றித்திரிவார்கள் என்பதால் தன் வீட்டுக்கு வர வேண்டாம் என அந்த இளைஞர் கூறியிருக்கிறார்.
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த பெண்ணின் எண்ணை வாட்ஸ்-அப்பில் அந்த இளைஞர் ப்ளாக் செய்தார்.
இதனால் கோபமடைந்த பெண், தன் காதலரின் வீட்டுக்கு நேரில் சென்று வாட்ஸ்-அப்பில் தனது எண்ணை ப்ளாக் செய்தது ஏன் எனக் கேட்டிருக்கிறார். இதில் தகராறு ஏற்பட்ட நிலையில், அந்த பெண் அன்றிரவு அங்கேயே தங்கியிருக்கிறார். காலையில், அந்த இளைஞர் எழுந்து பார்த்தபோது தனது காதலி துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அந்த இளைஞர் கொடுத்த முதற்கட்டத் தகவலின் அடிப்படையில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.