இரும்பு கம்பியால் அடித்து பெண் கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை


இரும்பு கம்பியால் அடித்து பெண் கொலை:  கணவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இரும்பு கம்பியால் அடித்து பெண் கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மைசூரு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

மைசூரு-

மைசூரு (மாவட்டம்) தாலுகா ஜெயப்புரா அருகே நகர்த்த ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் நாயக் (வயது45). இவரது மனைவி குமாரி. ரமேஷ் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் மனைவியிடம் ரமேஷ் நாயக் அடிக்கடி தகராறு செய்து வந்தார். மேலும் அவர் இரவு மது குடித்து விட்டு வந்து தகராறு செய்துள்ளார்.

மேலும் அவருக்கு மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந் தேதி மாலை ரமேஷ் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் குமாரியிடம் தகராறு செய்து அவரை தாக்கினார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து இரவு மீண்டும் மது குடித்து விட்டு வீட்டிற்கு ராஜேஷ் வந்தார். அப்போது ஆத்திரம் அடங்காத அவர் குமாரியை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ராஜேஷ் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயப்புரா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜெயப்புரா போலீசார் ராஜேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு மைசூரு மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது.

ஜெயப்புரா போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி குருராஜ் சோமகலவர், தீர்ப்பு கூறினார். அதில் மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story