ஜிம்மில் பழக்கம்: 40 வயது பெண்ணை சுட்டுக்கொன்று இளைஞர் தற்கொலை
40 வயது பெண்ணுக்கும், 23 வயது இளைஞருக்கும் ஜிம்மில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் டப்ரி பகுதியை சேர்ந்தவர் ரேனு (வயது 40). இவருக்கு திருமணமாகி கணவர், 3 குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக ரேனு அதேபகுதியில் உள்ள ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய சென்றுள்ளார். அப்போது, அதே ஜிம்மிற்கு வரும் ஆஷிஸ் (வயது 23) என்ற இளைஞருக்கும் ரேனுவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரேனு நேற்று இரவு தனது வீட்டின் வாசல் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு நடந்து வந்த ஆஷிஸ் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் ரேனுவை சரமாரியாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ரேனு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் ஆஷிசை கைது செய்ய அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால், ஆஷிஸ் தனது நாட்டுத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஆஷிஸ் உடல் அவரின் வீட்டில் கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரேனுவை சுட்டுக்கொன்ற ஆஷிஸ் தானும் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.