காதலியை தாக்கி, ஆடைகளை கிழித்து மரத்தில் கட்டி வைத்த காதலன் - குடும்பத்தினருடன் சேர்ந்து செய்த கொடூரம்..!
பெண் ஒருவரை அவரது காதலன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கி, ஆடைகளை கிழித்து மரத்தில் கட்டி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிதி,
ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் 26 வயது பெண் ஒருவரை அவரது காதலன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கி, ஆடைகளை கிழித்து மரத்தில் கட்டி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை இரவு 11 மணியளவில் சாரியா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணை மீட்ட போலீசார், உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவர்களுக்குள் ஏதோ பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கூறி காதலனின் தந்தை மற்றும் தந்தையின் இரண்டு மனைவிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணை புதன்கிழமை இரவு வீட்டிற்கு அழைக்குமாறு காதலனிடம் கூறியுள்ளனர்.
அந்த பெண் வீட்டை அடைந்ததும், அவர்கள் 4 பேரும் சேர்ந்து அவரை அருகிலுள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைத் தாக்கி, ஆடைகளைக் கிழித்து எறிந்தனர். பின்னர், அந்த கிழிந்த ஆடைகளைக் கொண்டு மரத்தில் கட்டி வைத்தனர். இரவுக்குள்ளாக அவர் இறந்துவிடுவார் என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டு சென்றனர்.
இந்த நிலையில் மீட்கப்பட்ட பிறகு, அந்த பெண் நடந்த சம்பவத்தை போலீசாரிடம் கூறினார். இதையடுத்து அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 4 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.