உ.பி.யில் பெண்களை நைட் ஷிப்ட் பணியில் ஈடுபடுத்த கூடாது; அரசு உத்தரவு
உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு பணியில் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் தொழிற்சாலையில் நைட் ஷிப்ட்டில் அவர்களை ஈடுபடுத்த கூடாது என அரசு சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்நிலையில், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் தொழிற்சாலையில் இரவில் அவர்களை பணியில் ஈடுபடுத்த கூடாது என அரசு அரசு சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.
இதுபற்றிய அந்த அறிவிப்பில், இரவு 7 மணியில் இருந்து காலை 6 மணி வரையிலான பணியில் பெண் தொழிலாளர்களை அவரது எழுத்துப்பூர்வ அனுமதியின்றி ஈடுபடுத்த கூடாது. அதுபோன்ற நேரங்களில் பணியாற்றும் பெண்களுக்கு இலவச போக்குவரத்து, உணவு மற்றும் போதிய கண்காணிப்பு ஆகியவை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, 7 மணியில் இருந்து காலை 6 மணி வரை பணியாற்ற மறுக்கும் பெண்களை பணியில் இருந்து நீக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உ.பி.யில் அனைத்து மில் மற்றும் தொழிற்சாலைகளில் பெண்களுக்கு பணி சூழலில் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இந்த விதிவிலக்குகளை அமல்படுத்தும்படி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.