நாடாளுமன்ற, சட்டசபைகளில் பெண்களுக்கு33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் கேள்வி
நாடாளுமன்ற, சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதில் பா.ஜ.க. தனது நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்து வந்தது.
இந்த விவகாரத்தை இப்போது தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சி கையில் எடுத்துள்ளது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, அந்தக்கட்சியின் மூத்த தலைவர் கவிதா, டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
பா.ஜ.க. நிலைப்பாடு என்ன?
இந்த நிலையில், இப்பிரச்சினையை காங்கிரஸ் கட்சியும் எழுப்பி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அல்கா லம்பா, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, அவரிடம் நிருபர்கள், நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றினோம். அந்த மசோதா உயிருடன்தான் உள்ளது. மக்களவையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை உள்ளது. அவர்கள் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்று 2019 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தனர். அதற்கு முன்பேகூட வாக்குறுதி அளித்தனர். ஆனால் 9 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் இந்த விவகாரத்தில் அமைதியாக உள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்குகிறது. இதில் பா.ஜ.க. தனது நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்ய வேண்டும். பெண்கள் உரிமைகளை உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மசோதாவுக்கு புத்துயிர்
இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, மாநிலங்களவையில் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி நிறைவேறியது. இது காங்கிரஸ் கட்சி தலைமையின் முயற்சிகளால்தான் நடந்தது.
ஆனால் மக்களவையில் இதற்கான ஆதரவைப்பெற முடியாமல் போய் விட்டது. இந்த மசோதா காலாவதியாகி விடவில்லை. அது உயிருடன்தான் இருக்கிறது, நிலுவையில் உள்ளது. அதற்கு புத்துயிரூட்டுவதைத் தடுப்பது எது?
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.