மீன் வளத்துறையில் பணியாற்றிய நிலையில் வேலையை விட்டு நீக்கியதால் தொழிலாளி தற்கொலை


மீன் வளத்துறையில் பணியாற்றிய நிலையில்  வேலையை விட்டு நீக்கியதால் தொழிலாளி தற்கொலை
x

ஹாசனில், மீன் வளத்துறையில் பணியாற்றிய நிலையில் திடீரென வேலையை விட்டு நீக்கியதால் விஷம் குடித்து தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுடன் அவருடைய குடும்பத்தினர் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹாசன்: ஹாசனில், மீன் வளத்துறையில் பணியாற்றிய நிலையில் திடீரென வேலையை விட்டு நீக்கியதால் விஷம் குடித்து தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுடன் அவருடைய குடும்பத்தினர் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிலாளி தற்கொலை

ஹாசன் மாவட்டம் ஹுலிகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் ஹுலியப்பா(வயது 45). இவர் ஹாசனில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் தினக்கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவரை திடீரென மீன் வளத்துறை அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கிவிட்டனர். இதில் மனமுடைந்த ஹுலியப்பா நேற்று முன்தினம் ஹாசனில் உள்ள வேளாண் விளை பொருட்கள் சந்தை அலுவலகம் அருகே வைத்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.

பேச்சுவார்த்தை

இதையடுத்து ஹுலியப்பாவின் குடும்பத்தினர் அவரது உடலுடன் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தாலுகா பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் பர்வதய்யா தலைமை தாங்கினார். இதுபற்றி அறிந்த பேளூர் போலீசாரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டக்காரர்கள் ஹுலியப்பாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், அவரது மனைவிக்கு மீன்வளத்துறையில் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பரபரப்பு

அவர்களது கோரிக்கைகளை ஏற்ற போலீசாரும், மீன்வளத்துறையினரும் இதுபற்றி அரசு அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதையடுத்து ஹுலியப்பாவின் உடலுடன் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story