சென்னை அருகே காணாமல் போன விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுக்கு பிறகு கண்டுபிடிப்பு


சென்னை அருகே காணாமல் போன விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுக்கு பிறகு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2024 5:20 PM IST (Updated: 12 Jan 2024 5:54 PM IST)
t-max-icont-min-icon

நீர்மூழ்கி வாகனம் பதிவு செய்த படங்களை ஆய்வு செய்ததில், விமான பாகங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படை விமானம், வங்கக் கடல் பகுதியில் பறந்தபோது காணாமல் போனது.

இந்த விமானத்தில், விமான ஊழியர்கள் 6 பேர், 11 விமானப்படை வீரர்கள், 2 ராணுவ வீரர்கள், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த தலா ஒரு வீரர்கள், கடற்படை ஆயுதக் கிடங்கி பணிபுரியும் 8 பேர் (இவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள்) என 29 பேர் பயணம் செய்தனர்.

விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதும், தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. 16 கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல், 6 விமானங்கள் மூலம் சென்னையில் இருந்து 150 நாட்டிக்கல் மைல் வரை தேடும் பணி நடைபெற்றது. ராடாருடன் கூடிய செயற்கைக் கோள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு படம்பிடிக்கப்பட்டது.

நீண்ட நாட்கள் நடந்த தேடுதல் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், செப்டம்பர் 15ம் தேதி தேடும் பணி கைவிடப்பட்டது. விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாயமான விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் மூலம் சமீபத்தில் அனுப்பப்பட்ட நீர்மூழ்கி வாகனம் பதிவு செய்த படங்களை ஆய்வு செய்ததில், சென்னை கடற்கரையில் இருந்து 310 கிமீ தொலைவில் கடலுக்கடியில் 3.4 கிமீ ஆழத்தில் கிடக்கும் பாகங்கள், காணாமல் போன ஏஎன்-32 விமானத்தின் பாகங்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story