மீண்டும் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் ஐக்கியமான ஒய்.எஸ்.வி.தத்தா


மீண்டும் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் ஐக்கியமான ஒய்.எஸ்.வி.தத்தா
x

காங்கிரசில் டிக்கெட் கிடைக்காததால் அதிருப்தியில் மீண்டும் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் ஐக்கியமான ஒய்.எஸ்.வி.தத்தா கடூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கமகளூரு:-

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், கட்சிகள் சார்பில் தங்களுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். மேலும் பலர் கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு தாவும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனால் கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதேபோல், சிக்கமகளூரு மாவட்டம் கடூரை சேர்ந்தவர் ஒய்.எஸ்.வி.தத்தா. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். இந்த நிலையில் கட்சி தலைவர்கள் மீதான அதிருப்தியில் இருந்து வந்த அவர், கடந்த மாதம் தான் அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்தார். இதனால் அவருக்கு காங்கிரஸ் சார்பில் சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட டிக்கெட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரும் டிக்கெட் எதிர்பார்த்து வந்தார். ஆனால், ஒய்.எஸ்.வி.தத்தாவுக்கு காங்கிரஸ் சார்பில் கடூர் தொகுதியில் டிக்கெட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதில் ஆனந்த் என்பருக்கு காங்கிரஸ் சீட் வழங்கியது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர், செய்வதறியாது திகைத்து போனார். இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஒய்.எஸ்.வி.தத்தா, சுயேச்சையாக போட்டியிட உள்ளார் என்று தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், ஒய்.எஸ்.வி.தத்தா மீண்டும் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் ஐக்கியமாகி உள்ளார். கடூரில் உள்ள அவரது வீட்டுக்கு எச்.டி.ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் சென்றனர். அவர்கள் முன்னிலையில் ஒய்.எஸ்.வி.தத்தா, ஜனதாதளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார். அவர் ஜனதாதளம்(எஸ்) சார்பில், கடூர் தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது.


Next Story