எடியூரப்பா - ஈசுவரப்பா திடீர் சந்திப்பு
பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரிப்பது குறித்து ஆலோசனை
சிவமொக்கா:-
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா தலைவர்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள். ஆனால் தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிட ஈசுவரப்பா தனது மகன் காந்தேசுக்கு டிக்கெட் கேட்டு வந்தார். ஆனால் பா.ஜனதா மேலிடம் அவருக்கு டிக்கெட் வழங்கவில்லை. இதனால் ஈசுவரப்பா அதிருப்தியில் இருந்து வந்தார். கட்சி தலைவர்களையும் சந்திக்காமல் இருந்து வந்தார்.
மேலும் ஈசுவரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். கட்சியில் ஒரு தொண்டனாக இருந்து கட்சிக்காக பாடுபடுவேன் என்றும் அவர் கூறினார். அதற்காக அவரை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி பாராட்டினார்.
இந்த நிலையில் நேற்று காலையில் எடியூரப்பாவை சிவமொக்கா டவுன் வினோபா நகரில் உள்ள அவரது வீட்டில் ஈசுவரப்பா சந்தித்து பேசினார். நீண்ட நாட்களுக்கு பின்பு இருவரும் நேரில் சந்தித்து பேசிக் கொண்டனர். கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு, தேர்தலில் தனக்கும், தனது மகனுக்கும் டிக்கெட் மறுக்கப்பட்டது குறித்து ஈசுவரப்பா பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பது குறித்து பேசி ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது எடியூரப்பாவின் மகனும், எம்.பி.யுமான ராகவேந்திரா, சிவமொக்கா நகர தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சன்னபசப்பா ஆகியோர் உடன் இருந்தனர்.
கர்நாடகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட வேண்டி எடியூரப்பாவுக்கு கட்சி மேலிடம் தனியாக ஒரு ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. அந்த ஹெலிகாப்டரில் தான் சிகாரிப்புராவில் இருந்து சிவமொக்காவுக்கு எடியூரப்பா நேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.