தேர்தல் அரசியலில் இருந்து எடியூரப்பா ஓய்வு
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சட்டசபையில் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு-
உணர்ச்சி பூர்வமாக...
கர்நாடக சட்டசபையின் கூட்டு மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து கடந்த 17-ந் தேதி கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் 15-வது சட்டசபையின் 15-வது கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை கூடியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்தார். அவருக்கு நேற்று சபையில் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். அதன் பிறகு இறுதியில் எடியூரப்பா உணர்ச்சி பூர்வமாக பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
நேர்மையாக உழைப்பேன்
எனது வாழ்க்கையின் கடைசி மூச்சு உள்ள வரை பா.ஜனதாவை பலப்படுத்த நேர்மையாக உழைப்பேன். கட்சியை ஆட்சி கட்டிலில் அமர வைப்பேன். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். சிலர் மோடி, பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்க்கும் மாய உலகில் வாழ்கிறார்கள். இது தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் அவர்களின் இந்த மாய உலகம் மிக விரைவிலேயே நொறுங்கிவிடும்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முழு மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும். எனக்கு பா.ஜனதா அநீதி இழைத்ததாகவும், புறக்கணித்து விட்டதாகவும் சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடி என்னை ஓரங்கட்டியதே இல்லை. பிரதமர் மோடி எனக்கு உரிய பதவி மற்றும் கவுரவத்தை வழங்கினார். இதற்காக அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
மறக்கவே மாட்டேன்
கட்சி எனக்கு கொடுத்த பதவி, வாய்ப்பகளை நான் மறக்கவே மாட்டேன். கர்நாடக பட்ஜெட், மாநிலத்தை வளர்ச்சி பாதையில் நிறுத்தியுள்ளது. ஆனால் நல்ல விஷயங்களை விட்டுவிட்டு சித்தராமையா அரசியல் நோக்கத்துடன் குறை கூறுகிறார். இந்த சபையை சபாநாயகர் காகேரி சிறப்பான முறையில் நடத்தியுள்ளார். அடுத்த முறை நீங்கள் (சபாநாயகர்) மந்திரியாகி இந்த பகுதியில் அமர வேண்டும்.
பெண்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சிகாரிப்புரா தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் நலனுக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன். வருகிற 27-ந் தேதி எனக்கு 80 வயது நிரம்புகிறது. அன்று நடைபெறும் எனது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சிவமொக்கா வருகிறார். அன்றைய தினம் சிவமொக்கா விமான நிலையத்தை அவர் திறந்து வைக்கிறார்.
பதவிகள் கிடைத்தன
தேவேகவுடா எனக்கு ஒரு வழிகாட்டி. அவரை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. இந்த வயதிலும் தேவேகவுடா பிரச்சினைகளை பற்றி பேசுகிறார். நான் அரசியலில் இந்த உயரத்திற்கு வளர ஆர்.எஸ்.எஸ். தான் காரணம். நான் அங்கு பயிற்சி பெற்றதால் தான் எனக்கு பல பதவிகள் கிடைத்தன. நான் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன். தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஆனால் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை ஆட்சியில் அமர்த்த பாடுபடுவேன். நீங்கள் அனைவரும் மீண்டும் வெற்றி பெற்று இந்த சபைக்கு வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
பிரதமர் மோடி பாராட்டு
சட்டசபையில் எடியூரப்பாவின் உரையை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டசபையில் இடம் பெற்ற எடியூரப்பாவின் உரை உந்துசக்தியாக உள்ளது என்று பா.ஜனதா கட்சியின் சாதாரண தொண்டராக சொல்கிறேன். அவரது பேச்சு எங்கள் கட்சியின் கொள்கையை எதிரொலிப்பதாக உள்ளது. அதனால் அவரது பேச்சு எங்கள் கட்சி தொண்டர்களுக்கும் உந்துசக்தியாக அமையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டசபையில் பசவராஜ் பொம்மை தனது டுவிட்டரில், "எடியூரப்பாவின் பேச்சை எங்கள் தலைவர் பிரதமர் மோடி இதய பூர்வமாக வரவேற்று பாராட்டியுள்ளார். எடியூரப்பா கட்சி தொண்டர்களுக்கு ஒரு முன்மாதிரி தலைவர். தானும் ஒரு தொண்டர் என்று அவர் கூறியுள்ளார். தனது பதவியை தாண்டி கட்சியினரை பாராட்டுவது மதிப்பு மிக்கது. எனது பட்ஜெட்டை எடியூரப்பா பாராட்டியது, எனக்கு உந்துசக்தி" என்று குறிப்பிட்டுள்ளார். கடைசி நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு எடியூரப்பா விதான சவுதா வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.