எடியூரப்பா பிரசாரம்;பா.ஜனதா மேலிடத்திற்கு வேட்பாளர் திடீர் கோரிக்கை


எடியூரப்பா பிரசாரம்;பா.ஜனதா மேலிடத்திற்கு வேட்பாளர் திடீர் கோரிக்கை
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு:-

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை வயதை காரணம்காட்டி அக்கட்சி தேர்தல் அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளது. லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த அவரை கட்சியில் இருந்து ஓரங்கட்டியதால் ஏற்பட்ட அதிருப்தியை சமாளிக்க அவரது மகன் விஜயேந்திராவுக்கு சிகாரிபுரா தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. மேலும் டிக்கெட் கிடைக்காத அதிருப்தியில் மூத்த தலைவர்களான லட்சுமண் சவதி, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் காங்கிரசுக்கு தாவியதால் அதிர்ச்சி அடைந்த பா.ஜனதா மேலிடம் எடியூரப்பா தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி எடியூரப்பா பிரசாரத்திற்காக சிறப்பு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் இன்று முதல் மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், பெரும்பாலான பா.ஜனதா வேட்பாளர்கள், கட்சி மேலிடத்திற்கு திடீரென்று புதிய கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது எடியூரப்பா இப்போது பிரசாரத்திற்கு வர வேண்டாம் என்றும், மே 1-ந்தேதிக்கு பிறகு தங்கள் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்தால் தான் மக்கள் இடையே எழுச்சி கிடைக்கும் என்றும், இப்போதே பிரசாரம் செய்தால், இறுதி கட்ட பிரசார நாட்களில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்க முடியாது எனவும், எனவே எடியூரப்பாவை மே 1-ந்தேதிக்கு பிறகு தங்களது தொகுதிகளில் பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளனர். இதனால் பா.ஜனதா மேலிடத்திற்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இறுதி நாட்களில் அத்தனை தொகுதிகளிலும் எடியூரப்பா எப்படி பிரசாரம் செய்ய முடியும் என யோசிக்கும் பா.ஜனதா மேலிடம், பா.ஜனதா வேட்பாளர்களின் பிரச்சினை தீர்க்க புதிய வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளது.


Next Story