1996-ம் ஆண்டுக்கு முன் வரை தீண்டத்தகாத கட்சியாக இருந்தீர்கள்: பா.ஜ.க.வை சாடிய உபேந்திர சிங்


1996-ம் ஆண்டுக்கு முன் வரை தீண்டத்தகாத கட்சியாக இருந்தீர்கள்:  பா.ஜ.க.வை சாடிய உபேந்திர சிங்
x

ராஷ்டீரிய ஜனதா தளத்துடன், ஐக்கிய ஜனதா தளம் ஒன்றிணைந்து விடும் என பா.ஜ.க.வின் சுஷில் மோடி கூறியது கண்டனத்திற்குரியது மட்டுமின்றி புண்படுத்தும் பேச்சு என உபேந்திர சிங் கூறியுள்ளார்.

பாட்னா,



பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் சார்பில் முதல்-மந்திரியாக நிதீஷ் குமார் பதவி வகித்து வந்த நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியது. இதனால் நிதிஷ் குமார் முதல்-மந்திரி பதவியில் இருந்து கடந்த 9-ந்தேதி விலகினார்.

இந்த நிலையில், பீகார் மாநில முதல்-மந்திரியாக 8-வது முறையாக அவர் கடந்த 10-ந்தேதி பதவியேற்று கொண்டார். பாட்னாவில் ராஜ்பவனில் ஆளுநர் பகு சவுகான் முன்னிலையில், நிதிஷ் குமார் பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டார்.

காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணியின் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் பதவியேற்றார். இதனை தொடர்ந்து, பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான, பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில் மோடி டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், இந்தியாவின் துணை ஜனாதிபதியாக நிதீஷ் குமார் விரும்பினார்.

அதற்கு சாத்தியம் இருக்கிறதா? என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் பா.ஜ.க. மந்திரிகளுக்கு தங்களது விருப்பங்களை தெரிவித்தனர் என பதிவிட்டார்.

ஆனால், இதனை மறுத்த நிதிஷ் குமார், எனக்கு அதுபோன்ற விருப்பம் எதுவும் கிடையாது. அவர்களுடைய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நாங்கள் எப்படி ஆதரவளித்தோம் என்று அவர்கள் மறந்து விட்டனரா? தேர்தல் முடியட்டும் என நாங்கள் காத்திருந்தோம். அதன்பின்பு எங்களது ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது என கூறியுள்ளார்.

அவர்களுக்கு ஒரு பதவி கிடைக்கும் என்றால், என்னை பற்றி எதுவேண்டுமென்றாலும் அவர்கள் பேசி கொள்ளட்டும். விடுங்கள் என்றும் அவர் கூறினார். ஆனால், பா.ஜ.க.வுக்கு நிதிஷ் குமார் நன்றியுடன் இருந்திருக்க வேண்டும். பல முறை அவரை பா.ஜ.க. மத்திய மந்திரியாக்கியது. பீகார் சட்டசபையில் குறைந்த பலத்துடன் இருந்தபோதும், அவரை முதல்-மந்திரியாக ஆக்கியது என சுஷில் மோடி மற்றும் ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் சமீபத்தில் கூறினர்.

இதனை தொடர்ந்து, ராஷ்டீரிய ஜனதா தளத்துடன், ஐக்கிய ஜனதா தளம் ஒன்றிணைந்து விடும் என பா.ஜ.க.வின் சுஷில் மோடி கூறினார். அவரது இந்த பேச்சு கண்டனத்திற்குரியது மட்டுமின்றி புண்படுத்தும் பேச்சு என உபேந்திர சிங் குஷ்வாகா கூறியுள்ளார்.

இதுபற்றி ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர்களில் ஒருவரான உபேந்திர சிங் இன்று கூறும்போது, ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியுடன், ஐக்கிய ஜனதா தளம் ஒன்றிணைந்து விடும் என பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில் குமார் மோடி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது மட்டுமின்றி, புண்படுத்த கூடிய பேச்சும் ஆகும் என கூறியுள்ளார்.

1995-96 ஆண்டுக்கு முன் வரை எந்தவொரு கட்சியும் அவர்களுடன் (பா.ஜ.க.) கூட்டணி அமைக்க விரும்பவில்லை. நீங்கள் ஒரு தீண்டத்தகாத கட்சியாக இருந்தீர்கள். அதன்பின்னர், சமதா கட்சியின் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் நிதிஷ் குமார் தேவதூதர்கள் போன்று பா.ஜ.க.வை மீட்க வந்தனர்.

மும்பை பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதன்பின்பு சமதா கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டது. தீண்டத்தகாத நிலையில் இருந்து பா.ஜ.க. தீண்டத்தக்க கட்சியானது. ஜார்ஜ்-நிதிஷ் ஆதரவுடன் இல்லையெனில் பா.ஜ.க.வின் தடமே இன்று இருந்திருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

செய்நன்றி மறத்தலுக்கான எல்லைகள் கடந்து போய் விட்டன. இந்த வரலாற்றை பா.ஜ.க தலைவைர்கள் நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும், ஒருவேளை அவர்களிடம் நன்றியுணர்வு எதுவும் இருக்குமெனில்...என்றும் குஷ்வாஹா தெரிவித்து உள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரியான உபேந்திரா, பீகாரின் மேலவை உறுப்பினராக இருந்து வருகிறார். சில காரணங்களுக்காக, நிதிஷுடன் ஏற்பட்ட மோதலில் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற உபேந்திர சிங், தனியாக ராஷ்டீரிய லோக் சம்தா கட்சியை தொடங்கி நடத்தினார். இதன்பின்னர், நிதிஷுடனான உறவு மேம்பட்டதும், தனது கட்சியை கடந்த ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைத்து விட்டார்.


Next Story