மும்பை அருகே கொடூரம் காதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம் 2 வாலிபர்கள் கைது


மும்பை அருகே கொடூரம் காதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம் 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 25 March 2023 4:15 AM IST (Updated: 25 March 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

மலையில் தனிமையில் காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

மும்பை,

மலையில் தனிமையில் காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த இளம்பெண் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அருகே உள்ள விரார் பகுதியில் ஜிவ்தானி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் உள்ள மலையில் சம்பவத்தன்று மாலை வேளையில் வாலிபர் ஒருவர், இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்தார். 20 வயதுடைய அவர்கள் காதலித்து வந்ததாக தெரிகிறது. காதல் ஜோடி தனியாக பேசிக்கொண்டு இருந்ததை அங்கு மதுகுடிக்க வந்த விரார் கிழக்கு சாய்நாத் பகுதியை சேர்ந்த தீரஜ் சோனி (வயது 25), லட்சுமண் ஷிண்டே (22) கவனித்தனர்.

அவர்கள் தனிமையில் இருந்த ஜோடியை செல்போனில் படம் எடுத்தனர். மேலும் அந்த படத்தை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவோம் என மிரட்டி வாலிபரிடம் பணம் பறிக்க முயன்றனர்.

வாலிபர் கையில் பணம் இல்லாததால் கூகுள் பே மூலம் ரூ.500 அனுப்புமாறு போனில் தொடர்பு கொண்டு நண்பரிடம் கேட்டு உள்ளார். அந்த நேரத்தில் தீரஜ் சோனியும், லட்சுமண் ஷிண்டேவும் இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். இதனால் வாலிபர், இளம்பெண்ணை காப்பாற்ற அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து தீரஜ் சோனி மண்டையை உடைத்தார்.

இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் வாலிபரின் ஆடையை களைந்தனர். அவரை கீழே தள்ளி கைகளை கட்டி போட்டனர்.

பின்னர் அவர்கள் இளம்பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கி சென்றனர். அங்கு அவர்கள் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். இந்த கொடூர செயலை தொடர்ந்து இளம்பெண்ணை மலை காட்டில் தனியாக விட்டு தப்பி ஓடினர். இளம்பெண் தனக்கு நேர்ந்த அவலத்துடன் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் இளம்பெண்ணுடன் இருந்த வாலிபர் ஒருவழியாக தனது கைகட்டுகளை அவிழ்த்து மலையில் இருந்து கீழே ஓடி வந்தார். அவர் உதவிகேட்டு சத்தம் போட்டார். வாலிபர் ஆடை இல்லாமல் இருந்ததால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொதுமக்கள் நினைத்தனர். இந்த நிலையில் வாலிபர் ஆடையில்லாமல் சுற்றிய தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரிடம் வாலிபர் நடந்த சம்பவத்தை கூறி கதறினார். ஆசாமிகளால் கடத்தப்பட்ட இளம்பெண்ணை வாலிபருடன் சேர்ந்து போலீசார் தேடினர்.

இந்த நிலையில் வாலிபர், இளம்பெண்ணை கடத்தி சென்றவர்களில் ஒருவரை தலையில் தாக்கியதை போலீசாரிடம் கூறினார். எனவே போலீசார் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளை தொடர்பு கொண்டு தலையில் காயத்துடன் யாரும் சிகிச்சை பெற வந்தால் தகவல் கொடுக்குமாறு தெரிவித்தனர்.

இதற்கிடையே தலையில் காயத்துடன் வாலிபர் ஒருவர் சிகிச்சைக்கு வந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆஸ்பத்திரி டாக்டர் காயத்துடன் வந்த வாலிபரின் படத்தையும் போலீசாருக்கு அனுப்பினார். அப்போது அவர் காதலனை தாக்கி, இளம்பெண்ணை கற்பழித்த தீரஜ் சோனி என்பது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தீரஜ் சோனியை கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் லட்சுமண் ஷிண்டேயையும் கைது செய்தனர். சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ததாக போலீசார் கூறினர்.

இதற்கிடையே போலீசார் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அவரது வீட்டில் மீட்டனர். இளம்பெண்ணின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்டவர்கள் மீது கூட்டு பலாத்காரம், இயற்கைக்கு மாறான உறவு, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Related Tags :
Next Story