போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மைனர்பெண்ணின் குடும்பத்தினர் மீது போலீசில் புகார்
போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மைனர்பெண்ணின் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி டவுனை சேர்ந்த வாலிபர் ஒருவர், அதேப்பகுதியை சேர்ந்த மைனர்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், அந்த வாலிபர், மைனர் பெண்ணை பலாத்காரம் செய்யதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனா். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தன் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மைனர்ெபண்ணின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போக்சோ வழக்கில் கைதான வாலிபர் கோர்ட்டில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து சிவமொக்கா கோர்ட்டு அனுமதியின்பேரில் அந்த வாலிபர், சிறையில் இருந்து வெளியே வந்து பத்ராவதி புறநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று மைனர்பெண்ணின் குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார். அதில், நானும், மைனர்பெண்ணும் காதலித்து வந்தோம். காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தோம். இந்த நிலையில் இளம்பெண்ணின் தாய் மற்றும் தந்தை, அவரது சித்தப்பா உள்பட 6 பேர் என்னை தாக்கியதுடன் ரூ.8 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். நான் பணம் கொடுக்க மறுத்ததால், நான் மைனர் பெண்ணை பலாத்காரம் செய்ததாக என் மீது பொய் புகார் கொடுத்துள்ளனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.