அண்ணியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை; சித்ரதுர்கா கோர்ட்டு தீர்ப்பு
சொத்துத்தகராறில், அண்ணியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சித்ரதுர்கா கோர்ட்டு தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
சிக்கமகளூரு;
சொத்துத்தகராறில், அண்ணி கொலை
சித்ரதுர்கா மாவட்டம் செல்லக்கெரே தாலுகா திப்பாரெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலரெட்டி (வயது 35). இவரது மனைவி மீனாட்சி (30). இவர்களுக்கு குழந்தை இல்லை. பாலரெட்டியின் தம்பி சீனிவாஸ் (28).
இந்த நிலையில் குழந்தை இல்லாத காரணத்தால், பாலரெட்டிக்கு அவரது தந்தை சொத்து களில் அதிகமான பங்குகளை எழுதி கொடுத்துள்ளார். இதையறிந்த சீனிவாஸ், பாலரெட்டியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இதைதொடர்ந்து பாலரெட்டி, சீனிவாசிற்கு சொத்தில் சிறிதளவு கொடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு பாலரெட்டியின் மனைவி மீனாட்சி சம்மதிக்கவில்லை. இதனால் மீனாட்சி மீது ஆத்திரமடைந்த சீனிவாஸ், அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீனாட்சி அதேபகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சீனிவாஸ், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் மீனாட்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சித்ரதுர்கா போலீசார் சீனிவாசை கைது செய்தனர்.மேலும் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு விசாரணை சித்ரதுா்கா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி பிரேமாவதி தீர்ப்பு கூறினார்.
அதில் சொத்துத்தகராறில், அண்ணியை கொன்ற சீனிவாசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.