சைவ உணவுக்கான பச்சை நிற சீருடையை திரும்பப் பெற்றது சோமோட்டோ


சைவ உணவுக்கான பச்சை நிற சீருடையை திரும்பப் பெற்றது சோமோட்டோ
x
தினத்தந்தி 20 March 2024 12:20 PM GMT (Updated: 20 March 2024 12:37 PM GMT)

பச்சை நிற சீருடை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 11 மணி நேரத்தில் திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

பிரபல உணவு விநியோக நிறுவனமான சோமோட்டோ நேற்று சைவ உணவு விநியோகத்துக்கு தனியாக பச்சை நிற சீருடை மற்றும் உணவு கொண்டு செல்லும் பெட்டியை அறிமுகப்படுத்தியது. மேலும், ப்யூர் வெஜ் வசதியின் கீழ் வாடிக்கையாளர்கள் சைவ உணவு விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவித்தது. இதுகுறித்து சோமோட்டோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த ப்யூர் வெஜ் செயலியில் சுத்தமான சைவ உணவை மட்டுமே வழங்கும் உணவகங்கள் மட்டுமே இடம்பெறும். அசைவ உணவுகளை வழங்கும் எந்தவொரு உணவகமும் இதில் இருக்காது. எங்களின் பிரத்தியேக ப்யூர் வெஜ் ஆப்ஷனில் ஆர்டர் செய்யும் உணவுகள் மட்டுமே டெலிவரி செய்வார்கள். அதாவது, அசைவ உணவு அல்லது அசைவ உணவகம் வழங்கும் வெஜ் சாப்பாடு கூட எங்கள் ப்யூர் வெஜ் ஆப்ஷனில் வராது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சோமோட்டோ நிறுவனத்தின் இந்த புதிய சேவைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது இந்த சேவையை திரும்பப் பெறுவதாக தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார். மக்களின் உணவுத் தேர்வுகளின் அடிப்படையில், நிறத்தால் பிரிவினையை ஏற்படுத்துவதாக இருப்பதாக, பச்சை நிற சீருடை மற்றும் பெட்டியில் சைவ உணவுகள் மட்டும் விநியோகம் செய்யும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 11 மணி நேரத்தில் திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தீபிந்தர் கோயல் இன்று காலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "சைவ உணவு உண்பவர்களுக்கான பிரத்யேக சேவையை தொடர போகிறோம் என்றாலும், அதற்கான பச்சை நிற சீருடை பயன்பாட்டு பிரிவினையை அகற்ற முடிவு செய்துள்ளோம். வழக்கமான டெலிவரி செய்பவர்கள் மற்றும் சைவ உணவு விநியோகம் செய்பவர்கள் ஆகிய இரு பிரிவு டெலிவரிமேன்களும் சிவப்பு நிற சீருடையையே அணிவார்கள்." என்று தெரிவித்தார்.


Next Story