சாம்ராஜ்நகர் அருகே காரை வழிமறித்து தாக்கிய 2 காட்டு யானைகள்


சாம்ராஜ்நகர் அருகே காரை வழிமறித்து தாக்கிய 2 காட்டு யானைகள்
x

சாம்ராஜ்நகர் அருகே காரை வழிமறித்து தாக்கிய 2 காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

கொள்ளேகால்:

சாம்ராஜ்நகர் அருகே ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை வனப்பகுதியை ஓட்டி உள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடி சாலையில் சுற்றித்திரிவதும், வாகனங்களை வழிமறித்து தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி ஆசனூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் 2 காட்டு யானைகள் கடக்க முயன்றன. இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு திரும்பி சென்றனர். இதைபார்த்த 2 காட்டுயானைகளும் ஓடிவந்து ஒரு காரை வழிமறித்தது. பின்னர் காட்டுயானைகள் தும்பிக்கையால் காரின் முன்பகுதியை தாக்கியது.

மேலும் ஆக்ரோஷமாக பிளிறின. இதனால் அந்த காரில் இருந்த வாலிபர் எதிர்திசையை நோக்கி வேகமாக ஓடிவந்து உயிர்பிழைத்தார். இதற்கிடையே யானைகள் தாக்கியதில் காரின் முன்பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது. இதனால் சாலையின் 2 புறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிறிதுநேரத்தில் காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இதையடுத்து வாகனஓட்டிகள் தங்களது வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். மேலும் வனப்பகுதிகளில் உள்ள சாலைகளில் யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் நடமாடாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தை யாரோ ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story