உப்பள்ளியில் குடோனில் பதுக்கிய 80 டன் பட்டாசுகள் பறிமுதல்


உப்பள்ளியில்  குடோனில் பதுக்கிய 80 டன் பட்டாசுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:46 PM GMT)

உப்பள்ளியில் சட்டவிரோதமாக பதுக்கிய 80 டன் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உப்பள்ளி-

உப்பள்ளியில் சட்டவிரோதமாக பதுக்கிய 80 டன் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. இந்தநிலையில் வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு பட்டாசுகள் லாரி, சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு சிவகாசியில் இருந்து அதிகளவு பட்டாசுகள் கர்நாடகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு அருகே அத்திப்பள்ளிக்கு சிவகாசியில் இருந்து சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் கொண்டு வரப்பட்டது.

அப்போது பட்டாசுகள் வெடித்து சரக்கு வாகனங்கள் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், திருமணம், அரசியல் கட்சி நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தது.

தீவிர சோதனை

இதையடுத்து போலீசார் மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறதா?, குடோனில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில், தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் சட்டவிரோதமாக குடோனில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக உப்பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். குடோனில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையில் 80 டன் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து குடோன் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story