மேற்கு தொடர்ச்சி மலை குறித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள அரசாணை குறித்து ஆலோசிக்க 18-ந் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்; மந்திரி அரக ஞானேந்திரா தகவல்


மேற்கு தொடர்ச்சி மலை குறித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள அரசாணை குறித்து ஆலோசிக்க 18-ந் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்;  மந்திரி அரக ஞானேந்திரா தகவல்
x

மேற்கு தொடர்ச்சி மலை தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அரசாணை குறித்து ஆலோசிக்க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 18-ந் தேதி நடக்க இருப்பதாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.

பெங்களூரு:

போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2 மாதங்கள் காலஅவகாசம்

மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி வசிக்கும் மக்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்க அந்த பகுதிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் 5 ஆயிரத்து 682 சதுர கிலோமீட்டர் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க மாநிலங்களுக்கு 2 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை சேகரிக்கும் பொருட்டு இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

வளர்ச்சி சரிந்துவிடும்

ஒருவேளை இந்த அரசாணை இறுதி செய்யப்பட்டால் மலைநாடு பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். வளர்ச்சி சரிந்துவிடும். தீவிரமான பொருளாதார பாதிப்புகள் ஏற்படும். கர்நாடக அரசு இதற்கு முன்பு கஸ்தூரிரங்கன் அறிக்கையை நிராகரித்துவிட்டது.

இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். அதனால் மத்திய அரசின் அரசாணைக்கு எதிராக முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.


Next Story