கேளிக்கை விடுதியில் தமிழக வாலிபர் மீது தாக்குதல்

பெங்களூருவில் கேளிக்கை விடுதியில் தமிழக வாலிபர் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
சென்னையை சேர்ந்தவர் ஸ்ரீராம் திருமலை. இவர் பெங்களூரு கோரமங்களா பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீராம் தனது நண்பர்கள் சிலருடன் கோரமங்களா 5-வது பிளாக்கில் உள்ள கேளிக்கை விடுதிக்கு மதுபானம் அருந்த சென்றார். இந்த நிலையில் ஸ்ரீராமின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. இதனால் அவர் செல்போனில் பேசியபடி கேளிக்கை விடுதியில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அவர் கேளிக்கை விடுதிக்குள் மீண்டும் செல்ல முயன்றார். ஆனால் அவரை உள்ளே அனுமதிக்க கேளிக்கை விடுதி பவுன்சர்கள் மறுத்து உள்ளனர்.
இதுதொடர்பாக ஸ்ரீராமுக்கும், பவுன்சர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஸ்ரீராமை, 3 பவுன்சர்கள் சேர்ந்து முகத்தில் குத்தியதாக தெரிகிறது. இதில் ஸ்ரீராமுக்கு தாடை உடைந்து உள்ளது. அவரை நண்பர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர். சம்பவம் குறித்த புகாரின்பேரில் கோரமங்களா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






