தண்ணீர் குழாய் கசிவே ரோடு சேதமடைந்ததற்கு காரணம் என தகவல்; பிரதமர் அலுவலகத்திற்கு பெங்களூரு மாநகராட்சி விளக்கம்


தண்ணீர் குழாய் கசிவே ரோடு சேதமடைந்ததற்கு காரணம் என தகவல்; பிரதமர் அலுவலகத்திற்கு பெங்களூரு மாநகராட்சி விளக்கம்
x

பெங்களூருவில் சாலையில் ஏற்பட்ட பள்ளம் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு பெங்களூரு மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. அதில், தண்ணீர் குழாய் கசிவு காரணமாக தான் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

பிரதமர் அலுவலகத்திற்கு விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ந் தேதி பெங்களூருவில் சுற்றுப்பயணம் செய்திருந்தார். பிரதமர் வருகையையொட்டி ஞானபாரதியில் இருந்து மரியம்மனபாளையா வரை ரூ.13 கோடிக்கு 9 கிலோ மீட்டர் தார்சாலை அமைக்கப்பட்டு இருந்தது. சாலை அமைக்கப்பட்ட 3-வது நாளிலேயே தார் பெயர்ந்து, பள்ளம் உருவாகி இருந்தது. இதுபற்றி உரிய விளக்கம் அளிக்கும்படி கர்நாடக அரசுக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டு இருந்தது. இதுபற்றி விசாரணை நடத்தும்படியும், சாலை பள்ளம் உருவானது குறித்து விளக்கம் அளிக்கும்படியும் மாநகராட்சிக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாநகராட்சியின் 3 என்ஜினீயர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டதுடன், சாலை பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் சாலை பள்ளம் உருவானது குறித்து கர்நாடக அரசின் தலைமை செயலாளர் மூலமாக பிரதமர் அலுவலகத்திற்கு பெங்களூரு மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்க கடிதமும் பிரதமர் அலுவலகத்தை சென்று சேர்ந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ரவீந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-

தண்ணீர் கசிவு காரணம்

ஞானபாரதியில் இருந்து மரியம்மனபாளையா வரை போடப்பட்டு இருந்த சாலையில் தார் பெயர்ந்து, பள்ளம் உருவாகி இருப்பதாக பிரதமர் அலுவலகத்திற்கு அளித்துள்ள விளக்கத்தில் தெரிவித்துள்ளோம். கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதம் அந்த சாலையில் வளர்ச்சி பணிகள் நடந்தது. இந்த சாலை மாநகராட்சிக்கு சேரும் முன்பாக, போடப்பட்டட குடிநீர், பிற குழாய்களில் கசிவு இருந்தது. அதன் வழியாக தண்ணீரும் வெளியேறி இருந்தது. மழை நேரத்திலும் அந்த சாலையில் தண்ணீர் கசிவு ஏற்படும்.

கடந்த மே மாதத்திலும் அதே சாலையில் தார் பெயர்ந்து, பள்ளம் ஏற்பட்டு இருந்தது. தண்ணீர் கசிவே புதிதாக போடப்பட்ட சாலையில் தார் பெயர்ந்ததற்கு காரணமாகும். தற்போது அந்த சாலையில் உண்டான பள்ளம் மூடப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story