பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பால சுங்க கட்டணம் உயர்வு; வருகிற 1-ந் தேதி முதல் அமல்


பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பால சுங்க கட்டணம் உயர்வு; வருகிற 1-ந் தேதி முதல் அமல்
x

9 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தின் சுங்க கட்டணம் வருகிற 1-ந் தேதி முதல் உயருகிறது.

பெங்களூரு:

நீண்ட தூர மேம்பாலம்

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் இருந்து சில்க் போர்டு வரை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.990 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள இந்த மேம்பாலம் தான் இந்தியாவில் நீண்ட தூரம் கொண்ட மேம்பாலம் என்று கூறப்படுகிறது. இந்த மேம்பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேம்பாலத்தில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதுபோல எலெக்ட்ரானிக் சிட்டியில் இருந்து தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள சுங்கச்சாவடியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கவும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எலெக்ட்ரானிக் சிட்டி-சில்க் போர்டு மேம்பாலம், எலெக்ட்ரானிக் சிட்டி- அத்திபெலே சாலையை பெங்களூரு எலிவேட்டட் டோல்வே என்ற தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணத்தை உயர்த்தி வருகிறது.

கட்டணம் உயருகிறது

இந்த நிலையில் கொரோனா உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக்கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில் சுங்கக்கட்டணத்தை உயர்த்த சாலையை பராமரித்து வரும் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. அதன்படி வருகிற 1-ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு அடுத்த ஆண்டு(2023) ஜூன் 30-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

ஆனால் சுங்கக்கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள், எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வசித்து வருபவர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். மேம்பாலம், தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும், சாலையை சரியாக பராமரிக்கவில்லை என்றும் வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர்.


Next Story