மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி:  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x

மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாகவும், மாநில வளர்ச்சிக்காக கூடுதலாக 2 மணிநேரம் பணியாற்றுவேன் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கொரோனாவால் இருந்து மீண்டார்

கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை இருந்து வருகிறார். இந்த நிலையில், முதல்-மந்திரி பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை நேற்று முன்தினம் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மறுத்து இருந்தார். அதே நேரத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்பட உள்ளதாகவும், பா.ஜனதா ஆட்சியில் 3-வது முதல்-மந்திரியாக யார் வரப்போகிறார் என்பது குறித்து கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவு வௌியிடப்பட்டு இருந்ததால் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதுபற்றி கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டு தனிமையில் இருந்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பசவராஜ் பொம்மை, நேற்று முதல் வழக்கமான அலுவல்களில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் டுவிட்டர் பதிவு குறித்து பெங்களூருவில் நேற்று பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களிடையே குழப்பம்

காங்கிரஸ் கட்சியினர், இதுபோன்று டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவது இது முதல்முறை இல்லை. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வேலைகளில் எப்போதும் ஈடுபடுவது காங்கிரசின் வழக்கமான ஒன்றாகும். தற்போதும் முதல்-மந்திரி மாற்றப்படுவதாக கூறி மக்களிடைய குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சித்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசி கொள்ளட்டும், ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறட்டும், இதுபற்றி விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை.

மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனே எனது முதல் நோக்கம். காங்கிரஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு காரணமாக நான் மிகவும் சக்தி வாய்ந்தவானாகி உள்ளேன். முதல்-மந்திரி மாற்றும் விவகாரத்தில் பா.ஜனதா மேலிட தலைவர்களின் உத்தரவு என்ன? என்பது எனக்கு தெரியும். மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள அனைத்து மந்திரிகளும் எனக்கு ஆதரவாக இருப்பதால், காங்கிரசார் கூறி வரும் தேவையில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. மாநில மக்கள் என் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

மக்கள் முழு நம்பிக்கை

காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. அந்த பிரச்சினைகளை மூடி மறைக்கவே, முதல்-மநதிரி மாற்றம் குறித்து பேசி வருகிறார்கள். அவர்கள் உருவாக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கே பாதகமாக முடியும்.

காங்கிரஸ் கட்சியினர், கர்நாடகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டோம் என்ற நினைப்பில் இருந்து வருகின்றனர். வருகிற 21-ந் தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.

கூடுதலாக 2 மணிநேரம்...

மாநிலததில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு செய்த சாதனைகள், பட்ஜெட்டில் நான் அறிவித்த திட்டங்கள் குறித்து மக்களிடையே தெரிவிக்கப்படும். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற வைக்க இன்னும் கடினமாகவும், உறுதியுடனும் உழைப்பேன். காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டுகளை, நான் ஆசிர்வாதமாக எடுத்து கொள்வேன்.

இந்த விவகாரத்திற்கு பின்பு மாநிலத்தில் கட்சியை வளர்க்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவேன். மக்கள் பிரச்சினையை தீர்ப்பது, மாநில வளர்ச்சிக்காக கூடுதலாக 2 மணிநேரம் பணியாற்றுவேன். சாம்ராஜ் பேட்டை ஈத்கா மைதானம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது. அங்கு கூட்டம், பிற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அரசின் அனுமதி கட்டாயமாகும். ஈத்கா மைதான விவகாரத்தில் தனிப்பட்ட நபர் கூறும் கருத்து முக்கியம் இல்லை. இந்த விவகாரத்தில் அரசு சட்டப்படியான நடவடிக்கையை எடுக்கும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story