போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமெரிக்க பெண்ணுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு


போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமெரிக்க பெண்ணுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
x

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான அமெரிக்க பெண்ணுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

பெங்களூரு:

அமெரிக்க பெண் கைது

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அமெரிக்காவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவில் வசித்து வரும் ஹெரரா வலன்ஜூலா டி லோபோ என்ற பெண் தனது உடலில் மறைத்து வைத்து போதைப்பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனால் அவரை கைது செய்த சுங்கத்துறையினர் 1 கிலோ 300 கிராம் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். கைதான ஹெரரா விசாரணைக்கு பின்னர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஹெரரா ஜாமீன் கேட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜாமீன் வழங்க முடியாது

இதனால் அவர் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் 2 ஆண்டுக்கு மேலாக சிறையில் இருந்து வருவதாகவும், என்னிடம் பேச ஸ்பானிஷ் மொழி தெரிந்த மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாததால் தனது தரப்பு நியாயத்தை யாரிடமும் கூற முடியவில்லை என்றும் தெரிவித்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சந்தேஷ் முன்னிலையில் நடந்து வந்தது.

அந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சந்தேஷ் கூறுகையில், சிறையில் 2 ஆண்டுகள் உள்ளதால் ஜாமீன் வழங்கும்படி மனுதாரர் கேட்பது நியாயமற்றது. 2 ஆண்டுகள் சிறையில் உள்ளார் என்பதற்காக ஜாமீன் வழங்க முடியாது. அவர் தரப்பு நியாயத்தை கேட்ட ஸ்பானிஷ் மொழி தெரிந்த மொழி பெயர்ப்பாளரை அரசு நியமிக்க வேண்டும் என்று கூறி மேல்முறையீடு செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story