மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி நடப்பதால் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை


மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி நடப்பதால்  மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை
x

மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி நடப்பதால் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

அணைகட்டும் திட்டத்தை உடனே...

மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை தொடங்குவதற்கு கர்நாடகத்திற்கு எந்த விதமான பிரச்சினையும், தடைகளும் இல்லை. இந்த திட்டத்தில் சட்டப்படி அனைத்தும் முடிந்து விட்டது. காவிரி நீர் ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க கூடாது என்று தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. காவிரி நீர் ஆணைய கூட்டத்தில் மேகதாதுவில் அணைகட்டும் திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறப்பட்டாலும், அதுபற்றி எந்த ஒரு தீர்மானமும் எடுக்காமல் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு வந்துள்ளது.

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு, தமிழக அரசு பல்வேறு கடிதங்களை எழுதினாலும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இது ஒரு இரட்டை ரெயில் என்ஜின் அரசாகும். மேகதாது அணைகட்டும் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு, கர்நாடக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி நடப்பதால் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும்.

பழிவாங்கும் அரசியல்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் ராகுல்காந்தியிடம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வழக்கு எப்போதோ முடிந்து விட்டது. அதில், எந்த விதமான முறைகேடும் நடைபெறவில்லை. அப்படி இருந்து பழிவாங்கும் அரசியலுக்காக, ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. பா.ஜனதாவினருக்கு அரசியலமைப்பு பற்றி எதுவும் தெரிவதில்லை. அதிகாரத்தில் இருப்பதால் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள். முதலில் பா.ஜனதாவினர் அரசியலமைப்பு பற்றி படிக்க வேண்டும். நாட்டில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு கூட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், மக்களுக்கும் பா.ஜனதா அரசு அனுமதி வழங்குவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story