பா.ஜனதாவுடனான கூட்டணியை தேவேகவுடா மறுபரிசீலனை செய்ய வேண்டும்-சி.எம்.இப்ராகிம் வலியுறுத்தல்


பா.ஜனதாவுடனான கூட்டணியை தேவேகவுடா மறுபரிசீலனை செய்ய வேண்டும்-சி.எம்.இப்ராகிம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:46 PM GMT)

பா.ஜனதாவுடனான கூட்டணியை தேவேகவுடா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சி.எம்.இப்ராகிம் கூறியுள்ளார்.

பெங்களூரு:-

பா.ஜனதாவுடன் கூட்டணி

பா.ஜனதாவுடனான கூட்டணியை எதிர்த்ததால் ஜனதாதளம்(எஸ்) மாநில தலைவராக இருந்த சி.எம்.இப்ராகிம் அதிரடியாக நீக்கப்பட்டார். அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதாவுடன் ஜனதாதளம் (எஸ்) கூட்டணி வைத்த முடிவை தேவேகவுடா மறுபரிசீலனை செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் அக்கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடாது. எம்.எல்.சியாக இருந்த என்னை ராஜினாமா செய்ய வைத்து, அக்கட்சிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் தற்போது பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தால், எனது வீடு பாழாகாமல் வேறு என்ன ஆகும்?..

நம்பிக்கை உள்ளது

பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தது எனது மனதுக்கு வேதனை அளிக்கிறது. கைகூப்பி கேட்கிறேன், பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டாம். வருகிற 26-ந் தேதி வரை நான் காத்திருப்பேன். தேவேகவுடா மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் குமாரசாமி மீது நம்பிக்கை இல்லை. என்னை கட்சியை விட்டு நீக்கியதன் மூலம் தவறான முடிவு எடுத்துள்ளனர்.

மாநில குழு தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டது. அதனால் தேவேகவுடா என்னை நீக்கியது சரியல்ல. அதற்கான விதிமுறைகளை பின்பற்றியே நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகிகள், ஒருங்கிணைப்பு குழுவை அமைத்தது நான் தான். அவர்களை தேவேகவுடா நியமிக்கவில்லை. கட்சி விதிகளுக்கு எதிராக நடந்து கொண்டால் அப்போது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதற்கு முன்பு நோட்டீசு வழங்க வேண்டும்.

கட்சியின் கொள்கை

கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி அங்கு முடிவு எடுத்து மாநில தலைவரை நீக்க வேண்டும். ஆனால் அது போல் நடைபெறவில்லை. விஜயதசமி பண்டிகை வருகிறது. எனக்கு இனிப்பு-கசப்பு இரண்டும் கிடைத்துள்ளது. நான் கேரளா, தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் செல்கிறேன். அங்கு கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறேன். வருகிற 25-ந் தேதி பெங்களூரு திரும்புகிறேன்.

26-ந் தேதி மும்பைக்கு செல்கிறேன். தேவேகவுடா கட்சியின் கொள்கைக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். வேறு கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறேன். நான் அமைதியாக இருக்க மாட்டேன். பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை தனிப்பட்ட முறையில் மதிக்கிறேன். ஆனால் கொள்கை ரீதியாக அவர்களை எதிர்க்கிறேன். எங்கள் கட்சி மாவட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களை என்னிடம் வருமாறு பகிரங்கமாக அழைக்கவில்லை.

இவ்வாறு சி.எம்.இப்ராகிம் கூறினார்.


Next Story