தார்வார்; வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது


தார்வார்;  வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

தார்வாரில் வாலிபர் கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

உப்பள்ளி-

தார்வார் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் இதுகுறித்து தார்வார் உபநகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தார்வார் உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் உப்பள்ளி டவுன் பழைய உப்பள்ளி ஆனந்த் நகரை சேர்ந்த ராகுல் (வயது28) என்பதும் அவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில், தார்வார் டவுன் பகுதியை சேர்ந்த மாருதி (32), படாமல்லய்யா (26) ஆகிய 2 பேர் ராகுலை கொலை செய்ததாக தார்வார் உபநகர் போலீசில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராகுலுக்கும், மாருதி மனைவிக்கும் இ்டையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கள்ளத்தொடர்பை கைடுவிடும்படி மனைவி மற்றும் ராகுலிடம் மாருதி கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து கள்ளத்தொடர்பில் 2 பேரும் இருந்துள்ளனர். இதனால் ராகுலை கொலை செய்ய மாருதி திட்டமிட்டார். அதன்படி தனது நண்பர் படாமல்லாயாவிடம் சேர்ந்து மாருதி, ராகுல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

இதையடுத்து போலீசார் மாருதி, படாமல்லாய்யா ஆகிய 2 பேரையும் தார்வார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story