தார்வார்; தனியார் கூட்டுறவு வங்கியில் ரூ.1¼ கோடி கொள்ளை


தார்வார்; தனியார் கூட்டுறவு வங்கியில் ரூ.1¼ கோடி கொள்ளை
x
தினத்தந்தி 24 Oct 2023 6:45 PM GMT (Updated: 24 Oct 2023 6:45 PM GMT)

தார்வாரில் தனியார் கூட்டுறவு வங்கியில் புகுந்து ரூ.1¼ கோடியை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

உப்பள்ளி-

தார்வாரில் தனியார் கூட்டுறவு வங்கியில் புகுந்து ரூ.1¼ கோடியை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கூட்டுறவு வங்கி

தார்வார் டவுன் வித்யாகிரி போலீஸ் எல்லைக்குட்பட்ட ராயபுரா பகுதியில் தர்மஸ்தலா மஞ்சுநாதா டிரஸ்டுக்கு சொந்தமான கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியையொட்டி கூட்டுறவு வங்கிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அங்கு காவலாளி ஒருவர் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காவலாளி சாப்பிட சென்றதாக தெரிகிறது. அந்த சமயத்தில், வங்கியின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பிகளை அறுத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

ரூ.1¼ கோடி கொள்ளை

பின்னர் அவர்கள், வங்கியில் இருந்த லாக்கரை உடைத்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை காவலாளி வங்கியை சுற்றி சென்றபோது, பின்பக்க ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வங்கி அதிகாரிகளுக்கும், வித்யாகிரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

வங்கி அதிகாரிகளும் விரைந்து வந்து வங்கியில் ஆய்வு செய்தனர். அப்போது லாக்கரில் இருந்த ரூ.1.25 கோடி மாயமாகி இருந்தது. இதனால் மர்மநபர்கள் ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து, வங்கி லாக்கரை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

மா்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் ரேணுகா சுகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் மர்மநபர்களின் ரேகைகளை பதிவு செய்துகொண்டனர்.

இதுகுறித்து வித்யாகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story