போலி டாக்டர் கைது; கிளினிக்கிற்கு 'சீல்'


போலி டாக்டர் கைது; கிளினிக்கிற்கு சீல்
x
தினத்தந்தி 20 Oct 2023 6:45 PM GMT (Updated: 20 Oct 2023 6:46 PM GMT)

பங்காருபேட்டையில் போலி டாக்டர் கைது; கிளினிக்கிற்கு ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்டம் பங்காருபேட்டையில் போலி டாக்டர் ஒருவர் கிளினிக் நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பான புகார்கள் தாசில்தார் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுக்கு சென்றது. அதன்பேரில் நேற்று தாலுகா சுகாதார துறை அதிகாரிகள் போலீசாருடன் பங்காருபேட்டை டவுனில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பங்காருபேட்டை டவுனில் உள்ள தேசஹள்ளியில் கிளினிக் நடத்தி வந்த ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுகாதார துறை அதிகாரி பிரியதர்ஷினி, தாசில்தார் ரஷ்மி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது பெயர் ரஜினிகாந்த் என்பதும், டாக்டருக்கு படிக்காமலேயே கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலி டாக்டர் ரஜினிகாந்தை போலீசார் கைது செய்தனர். அவரது கிளினிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பங்காருபேட்டை தாலுகா சுகாதாரத்துறை அதிகாரி பிரியதர்ஷினி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'தாலுகாவில் பங்காருபேட்டை டவுனில் மட்டுமின்றி பல கிராமங்களில் இது போன்ற போலி டாக்டர்கள், கிளினிக் நடத்தி வருகிறார்கள். அதுகுறித்த புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம். போலி டாக்டர்கள் இருப்பது பற்றி தெரிந்தால் உடனே தாலுகா சுகாதாரத் துறைக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும்' என்று கூறினார்.


Next Story